முள்வேலி

பாவலர் கருமலைத்தமிழாழன்
 


வீதிகளில் வேற்றுமையைத் தோற்று வித்து
         வீணாக வெறிச்சண்டை போட வைக்கும்
சாதிமத முள்வேலி தேவை தானா
        சாத்திரங்கள் பழம்மூடம் தேவை தானா
ஆதியிலே இல்லாத வித்தை யிங்கே
        அருந்தமிழர் வாழ்வினிலே விதைத்த வர்யார்
பாதியிலே போட்டமுள்ளாம் வேலி தன்னைப்
       பறித்தெறிய முனையாமல் இருப்ப தோநாம் !

ன்பாக உரைத்தசொற்கள் உண்மை யென்றும்
       அவர்மொழிந்த வாக்குறுதி செய்வா ரென்றும்
இன்பமான வாழ்க்கைதாம் கிடைக்கு மென்றும்
       இலவசங்கள் தந்தவர்க்கே வாக்க ளித்து
வன்நெஞ்ச வஞ்சகத்தை அறிந்தி டாமல்
       வலியசென்று முள்வேலி போட்டுக் கொண்டு
துன்பத்தில் துடிக்கின்ற போதும் வெட்டித்
       தூக்கியதை எறியாமல் இருப்ப தோநாம் !

லகத்தில் வாழ்கின்ற வாழ்நா ளுக்கே
       உரியதொரு முள்வேலி இயற்கை போட்டும்
பலரிங்கே நிரந்தரமாய் வாழ்வ தாகப்
       பக்கத்து வீட்டாரும் நுழைந்தி டாமல்
நிலத்திற்கும் நீருக்கும் வேலி போட்டு
      நிற்கின்றார் மனத்திற்கு வேலி யிட்டே
வலம்வந்து வீசுகின்ற காற்றைப் போல
     வாழ்ந்திடவே வேலிகளைத் தகர்ப்போம் வாரீர் !



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்