வரலாற்றைத் தொடங்கியவர் எங்கே
பாவலர் கருமலைத்தமிழாழன்
வரலாற்றின் தொடக்கம்நாம் என்றே நாளும்
வாய்கிழிய முழக்கலன்றி
வேறென் செய்தோம்
மரக்காட்டில் மற்றவர்கள் திரிந்த போது
மலைகுகைக்குள் மற்றவர்கள்
வாழ்ந்த போது
குரலெடுத்து மொழிபேசி ஆற்றின் ஓரம்
குடிலமைத்து நிலமுழுது
பயிர்வி ளைத்துத்
திரண்டதோள்கள் வலிமையாலே நாட மைத்துத்
திகழ்ந்ததமிழ் இனமின்று
போன தெங்கே !
தொன்மையான தமிழ்மொழிக்குச்
சொந்தக் காரர்
தொகையாகப் பத்தெட்டைக்
கொண்ட வர்கள்
நன்றாக வாழ்க்கையினை நடத்து தற்கு
நற்குறளை அகம்புறத்தைத்
தந்த வர்கள்
தொன்னூறு வகையான இலக்கி யங்கள்
தொல்நன்னூல் இலக்கணங்கள்
பெற்ற வர்கள்
என்றேதான் உரைத்தலன்றி வேறென் செய்தோம்
எழிற்றமிழை ஆங்கிலத்தின்
அடிமை செய்தோம் !
கடல்வழிகள் கண்டறிந்தோம்
கலங்கள் விட்டோம்
கடற்படைகள் உருவாக்கி நாடு
வென்றோம்
தடம்பதித்தோம் அயல்நாட்டில் வணிகம் செய்தோம்
தரணிக்கே நாகரிகம் கற்றுத்
தந்தோம்
இடம்பிடித்தோம் பல்கலைகள் இயற்றித் தந்தோம்
இந்நிலத்தின் மூத்தகுடி என்று
நாமே
குடம்குடமாய்ப் புகழ்தலன்றி வேறென் செய்தோம்
குந்தவொரு நாடின்றி அலையு
கின்றோம் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|