அகதிப் பட்சி

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

அப்பாரிய மலைகளைத் தாண்டிய வனாந்தரத்தின்
பெரு விருட்சமொன்றின் பரவிய கிளைகளில்
குச்சுக்களால் வேயப்பட்டு
எமக்கென்றொரு அழகிய கூடிருந்தது
இணைப்பறவைகள் சேர்த்துக் கட்டிய வீட்டில்
அழகாய்ப் பிறந்து கீச்சிட்டேனாம்

இரை திரட்டி வந்த அன்னைப் பட்சி
தொண்டைக்குள் வைத்தழுத்திய உணவு காயும் முன்
வேட்டைப் பறவையொன்றின்
வஞ்சகம் சூழ்ந்த விழிகளிலே விழுந்திட்டேன்

இறகுகள் இருக்கவில்லை
வில்லங்கங்கள் தெரியவில்லை
விசித்திர வாழ்க்கையிதன்
மறைவிடுக்குகள் அறியவில்லை
அன்னை அருகிலாப் பொழுதொன்றில்
சாத்தானியப் பட்சி காவிப்பறந்திற்று என்னை

கூரிய சொண்டுக்குள் என்
தோள் கவ்விப் பறக்கும் கணம்
மேகங்கள் மோதியோ
தாயின் கண்ணீர்ப் பிரார்த்தனையோ
எப்படியோ தவறிட்டேன்
கீழிருந்த இலைச் சருகுக்குள்
வீழ்ந்து பின் ஒளிந்திட்டேன்

அடை காத்தவளும் வரவில்லை - பின்னர்
காவிச் சென்றவனும் வரவில்லை
எப்படி வளர்ந்தேனென்று
எனக்கும் தெரியவில்லை
இறகுகள் பிறந்தன
தத்தித் தத்திப் பறக்கக் கற்றேன்

இன்று புராதன நினைவுகளைத் திரட்டியெடுத்து
வலிமையான குச்சிகள் கொண்டு
எனக்கொரு வீடு கட்டுகிறேன்
விஷப் பறவைகள் காவிப்பறக்க இயலா
உயரத்தில் உருவத்தில்
விசித்திரமான கூடொன்று கட்டுகிறேன்
கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி
என் குஞ்சுகளுக்கு வேண்டாம்




mrishanshareef@gmail.com