நலம்தரவே
வேண்டுகின்றேன்
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
உழுதுண்டு
வாழ்வதற்(கு) ஒப்பில்லை மற்றவற்றில்
பழுதுண்டு எனப்பகரும் பண்பாட்டின் பாதையிலே
முழுதாக வேரோடி முளைத்ததுவே தைத்திருநாள்
எழுவானின் கதிரவனை ஏற்றிவைக்கும் மெய்த்திருநாள்!
மதிநிறைந்த
மார்கழியில் மாமுகில்கள் மழைபொழியக்,
கதிர்விளைந்து களம்நிறையக், கழனியெலாம் நீர்பெருகப்
புதியவளாய்த் தைமகளும் புறப்படுவாள் இக்களிப்பில்
மதுக்குடமாய் மனம்பொங்கும் மனையெங்கும் பால்பொங்கும்!
தைபிறந்தால்
உழைப்பாளர் கையுயர வாழ்வுயரும்
வையகத்தில் வாழ்வாங்கு வாழவழி கூடிவரும்
மெய்யாக நெஞ்சினிலே மேவிவரும் நம்பிக்கை
நெய்விளக்காய் ஒளிவீச நிறைவுடனே பால்பொங்கும்!
காவிரிந்து
வளம்பெருகக் கழனியெங்கும் பயிர்செழிக்கப்
பூவிரியும் சோலையெனப் புவனமெலாம் புலர்ந்துவரப்
பாவிரித்துத் தைமகளைப் பண்புடனே வரவேற்றே
நாவிருத்திப் பாடுகின்றேன் நலம்தரவே வேண்டுகின்றேன்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்