வாழி நிலத்தொடும் வாழியவே
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
செகமெலாம்
வந்தது செந்தமிழே
சீரிய மரபினைச் சேர்த்தவளே
அகமெலாம் மகிழ்ந்திடும் ஆரணங்காய்
அன்பினிற் பூத்தனள் அருந்தமிழே!
தகத்திடுஞ் சூரியப் பேரொளிபோல்
தமிழொடும் பிறந்ததே தைமரபாம்
முகமலர் சிந்திடும் விழிச்சுடராய்
முத்தமிழ் மரபதும் முகிழ்த்ததுவே!
மறைமுதல்
மங்கலம் மரபுரிமை
மாட்சிமை பொங்கலின் வாழ்வுரிமை
நெறியெலாம் நீதியின் நிலத்துரிமை
நித்திலம் ஏரிடும் நீர்ப்பெருமை
அறிவிடும் கல்வியின் அகத்துரிமை
ஆலயம் மன்புகல் அறிவுடமை
வறியவர் இல்லையெம் மண்ணகத்தே
வகைதொறும் மரபெனும் சால்புடைத்தே!
வறுமையும்
துயர்களும் மாயட்டும்
வையமும் கதிரென மலரட்டும்
துறைகளும் துருத்தியும் பெருகட்டும்
தொழில்களும் விருத்தியும் பரவட்டும்
சிறைகளும் உடைகவே செம்மையெனத்
தொல்தமி ழாகுவை செந்தமிழே!
கறையெலாம் அகலவே காந்தமெனக்
கன்னரும் பாகுக கார்நிலமே!
நன்னெறித்
தமிழொடும் நாற்றிசையும்
நாயக மாகவே நல்மனையும்
மன்புகழ் கொண்டனள் மணித்தமிழாள்
மரபுரி யாகினள் மகத்துவமே
தென்பழம் வாழையும் மாபலாவும்
சேர்நறும் சற்கரைத் தீம்பாலும்
பின்னமாய் அரிசியும் பொன்பயறும்
பொங்கிட வாகுமாம் பொங்கலடா!
செந்தமிழ்த்
தினமெனத் தொடுவானம்
சொல்லிய ரும்பிடச் சிரித்திடுமே
சந்ததம் தைமகள் மரபாகிச்
சரித்திர மாகுமே சமநீதி
சிந்தையில் மக்களின் மாபொங்கல்
சிறந்திடக் காணுமே திறம்பாடி
வந்ததே தமிழ்நிலம் மாதரொடும்
வாழிஅ றத்தொடும் வாழியவே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|