அடையாள
அட்டை
தர்மினி
என்னுடைய பதினாறாவது வயதில்
ஒரு அடையாள அட்டையை
சிறீலங்கா அரசாங்கம் தந்தது.
இது எதற்கெனக் கேட்டபோது அம்மா சொன்னார்
''பரீட்சை மண்டபங்களிலும் தேர்தலில் வாக்களிக்கவும் தேவைப்படும்''.
சில வருடங்களில்,
புலிகளினாலொரு அடையாள அட்டை தரப்பட
மீண்டும் ஏனென்று கேட்டேன்
''பயிற்சி எடுத்ததற்கு ஆதாரம்''.
பின்னும் மாதங்கள் கடந்து
சிறீலங்காவின் இராணுவமும்
அடையாள அட்டையொன்றைத் தந்தது.
அப்போது சொல்லப்பட்டது,
''ஆமிக் கட்டுப்பாட்டில் வாழ்வதற்கு அவசியம்''.
புகைப்படம்
இலக்கங்கள்
தேசிய இனம்
மாவட்டம்
ஆயுதங்கள்
சிறைகள்
இவையில்லாத
குட்டித் தீவொன்றைக் களவாடத் திட்டமிடுதல்,
பெரும் பறவையின் சிறகுகளுக்காக
வானத்தை அண்ணார்ந்து பார்த்தல்,
அடையாள அட்டையை அடிக்கடி மறக்கச்செய்து
அரைவழியில் வீடு திரும்பி வரக் காரணங்களாயின.
tharmini@hotmail.fr
|