வெளியூர் வாசிகளின் வலி

வித்யாசாகர்

இதயம் கீறி எழுதும்
ரத்தம் சிந்தா வலிகளை
சுமந்து தான்
வளைகுடாவில் நகர்கிறது வாழ்க்கை;

பிறந்த மண், வீடு,
மழை, காற்று, மலர்களின் வாசமும்..

இடி, காகம்,
குழந்தைகளின் பேச்சு,
நாய் குறைப்பு,
மாடு கத்தும் ஓசையும்..

பசும்புல் கால் நனைக்கும்
பனியின் ஈரம்,
காலை நேர தேனீர்,
சுட சுட ருசிக்கும் சிற்றுண்டி,
வேளை வேளைக்கு உண்ணும் உணவு
அறுசுவை இனிப்பும் காரமும்...

செல்லமாய் வளர்த்த
நாய்குட்டி,
வீடு சுற்றி மீன் கொண்டு போகும்
பூனை,
வாசலில் பருக்கைகளை மேயும் கோழி,
ஜன்னலில் இருந்து கத்தும் மைனாவும்
சிட்டுக் குருவிகளும்.....

அம்மாவின் மடி
அப்பாவின் முத்தம்
அண்ணாவின் கைபிடித்த நடை
அக்காவின் அறிவுரை
தங்கையின் கொஞ்சல்
தம்பியின் பாசம்
உறவுகளின் அக்கறை
சுற்றத்தாரின் நட்பு
ஊர்கோவில் திருவிழா
விழுந்து விழுந்து காதலித்த காதலியின் நினைவும்..

ஊரூராய் சுற்றி
குளமெல்லாம் நீந்தி
காடு வயலெல்லாம் திரிந்து
வேலை கிடைக்காமல் அலைந்து
வீட்டில் வாங்கிய திட்டுகளும்
வெளியூர் வருகையில் அவர்கள் அழுத
அழையும்............

அப்பப்பா; மறக்கவாமுடிகிறது நாம்
விட்டுவந்த நம் தேசத்தை?????

எத்தனை கடிதம்
எவ்வளவு தொலைபேசி அழைப்பு
பற்றாக் குறைக்கு -
மின்னஞ்சல் செய்து
இணையத்தில் பேசி
யார் யாரிடமோ வீடு பற்றி
உறவு பற்றி
விட்டுவந்த மண்ணிலிருந்து
மலைவரை பேசி பேசி பேசி
உள்ளுக்குள் சுமக்கும் ஊரின் கனம்
வலி தான்.. வலிதான்!


vidhyasagar1976@gmail.com