உழைப்பவன் பொங்கலென்று உயரட்டும்
தமிழர் பொங்கல்!!
கவிஞர் தமிழ்ச்சித்தன்
மாண்புறு
தமிழர் பொங்கல்
மரபெனக் கனடா மண்ணில்
சீரோடு உதித்ததென்ற
தித்திப்புச் செய்திகேட்டுப்
பாரெல்லாம் மகிழும் நேரம்!
பொங்கலோ பொங்கல் என்று
பூரிப்பில் மகிழ்கின்றோம் நாம் - ஆயினும்
எத்தனை பொங்கல் பார்த்தோம்
எதுவுமே மாறக்காணோம்
வெள்ளையர் கறுப்பர் என்று
விதவித மனிதர் கண்டோம்
இனவெறி இரத்தம் ஊறி
இனங்களை விழுங்கக் கண்டோம்
அன்பினைக் கொன்று மாந்தர்
அவனியை அழித்தல் கண்டோம்
ஒருவரை ஒருவர் தின்னும்
உள்ளங்கள் பலரைப் பார்த்தோம்
ஒற்றுமைச் சாயம் பூசும்
ஒப்பனை உலகம் கண்டோம்
வேளைக்கோர் பேச்சால் மக்கள்
விடிவின்றி அலைதல் கண்டோம்
நாளுக்கோர் கட்சி என்று
நானிலம் நலியக் கண்டோம்
போட்டி, பொறாமை, புறஞ்சொல்லல்
பொய், களவு, சாதி, மதப்பிரிவு
சற்றும் குறையாமல்
சைவரின் பொங்கலென்றும்
சமயஇந்துவின் பொங்கலென்றும்
சூரியப்பொங்கலென்றும்
சுடர் ஒளிப்பொங்கலென்றும்
வாதிடும் பழக்கம் நீங்கி -இனி
உலகில் உழைப்பவன்
பொங்கலென்று முழங்கட்டும்
தமிழர் பொங்கல் !!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|