பாரதியால் பெற்ற பயன்
கவிஞர் கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை
ஊரடங்கும் நேரத்தும்
ஊறின்றிப் பெண்களெலாம்
பூரணமாய் வீதியிலே போதலுடன் - பாரதிரும்
வீரமுடன் பாவையரும் வென்றிட்டால் அஃதேதான்
பாரதியால் பெற்ற பயன்.
வீரம், விடுதலை,
வித்தாக நெஞ்சுறுதி,
ஈர விழிவழியும் ஈவிரக்கம் - வாரணம்போல்
ஆரத் தமிழணைக்கும் ஆவேசம், யாவும்நாம்
பாரதியால் பெற்ற பயன்.
செந்தமிழின்
சிந்தனையைச் சீரிய மூச்சாக்கி
நந்தமிழால் நெஞ்சுள் நலமேற்றி - சந்ததமும்
பாரதத்தின் ஒற்றுமைக்காய்ப் பண்புடன்நாம் வாழ்வதுவே
பாரதியால் பெற்ற பயன்.
வள்ளுவரால்
முப்பால்தான்; வான்கம்ப னால்தமிழ்த்தேன்;
தெள்ளும் இளங்கோவால் தீக்கற்பு;- உள்நெஞ்சில்
வீர உணர்வும் விடுதலை அக்கினியும்
பாரதியால் பெற்ற பயன்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|