மகாத்மா காந்தி, நினைவுநாள் கவிஞர் அச்சுவேலியூர் கு.கணேசன்
எழுசீர் விருத்தம்:
கோமகனைக் கொன்றான்
கொடும்பாவி கோட்சே!
காவியம் ஒன்று அழிந்தது
பாவியைக் கூடவே பார்த்துப் பரிந்த
பாரதம் தந்த பகவான்தன்
ஆவியைக் கூடவே அன்னை மண்ணுக்கு
அர்ப்பணித் ததந்த ஆத்மஜோதி
தூவியே மலர்சாற்றித் தூபம் இடுவோம்
தூயநம் காந்தியின் நினைவேந்தி!
நினைந்து! நினைந்து
நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத் துன்பம் பெருகுதே
நனைந்து குருதியில் நாடே மிதக்குதே
நம்ப முடியவில்வை காந்தியே
கனைகடல் வானம் காற்றும் அழுததே
காந்தி மகானைத் தொழுதங்கே
உனையீன்ற தாய்நாடும் உனதருமை மக்களும்
உலகுள்ள வரையுன்னை மறவாரையா
வெளி விருத்தம்:
இந்திய மாதாவின் ஈடில்லா
மைந்தன் - காந்தியை
வந்தனை செய்தே வாழ்த்துவோம் வாரீர்
இந்திய விடுதலை வேள்விக்கு ஈகமே - அந்த
மந்திரப் புன்னகை மகாத்மாவின் தியாகமே!
கத்தியின்றி
இரத்தமின்றிப் புத்தியாலே யுத்தம் - அங்கே
அத்திவாரம் ஏதுமில்லை ஆத்மீகமே சித்தம்
சத்திய சோதனைமுன் சாய்ந்ததே இமயம் - இங்கே
சித்திபெற்ற சுதந்திரம்; தேவகாந்தி; தியாகமே!
அறுசீர் விருத்தம்:
காந்தியைப் போலொரு
சாந்த சொரூபரைக்
காண்பதும் எழிதாமோ
மாந்தருள் மாணிக்கம் மாபெரும் ஜோதி
மகாத்மா காந்தியே
சோர்ந்தநம் பாரதச் சோலையைப் புதுப்பித்த
சுதந்திர தேவதையை
ஏந்தியே இதயத்தில், இந்திய தேசத்தின்
வேந்தனாய் வாழ்த்திடுவோம்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|