ஹைக்கூக்கள்.
முனைவர் வே.புகழேந்தி, பெங்களூர்
வழுக்காமல்
கீழிறங்குகிறது
பாசி குளத்தில்
மாலைச் சூரியன்
வட்டத்தை கோடுகளுடன் இணைத்து
வாய் நிறைய 'அப்பா' என்கிறாள்
உயிர்ப் பெறுகிறது ஓவியம்.
வரப்பின் மேல் நடக்கையில்
கணநேரம் பாய்ச்சிய நிழலை
பறித்து பறந்திடும் பறவைக் கூட்டம்.
அறுவடை முடிந்த வயல்
சோலைக் கொல்லை பொம்மையின்
தலையைக் கோதியபடி சிட்டுக்குருவி.
மண்சாலையின் சக்கரத் தடத்தை
மூடியவாறே வண்டியைத் தொடர்கிறது
முதல் மழையின் தூறல்.
படிக்கும் ஆசையை பிழிந்தவாறே...
பள்ளிவாசலில் சாறெடுக்கும் இயந்திரம்.
தந்தைக்கு உதவிடும் சீருடைச்சிறுமி.
கடைசி நேர கையசைப்புகளை
நிலையத்திலேயே தவற விட்டு
வேகமெடுக்கிறது தொடர்வண்டி.
விட்டு வைக்கவில்லை
பெயர் சூட்டியவன் வீட்டையும்
பெரும் புயல்.
பறவையின் உயிர்நீத்தல்
குறித்து
அலட்டிக்கொள்ள வில்லை யாரும்.
விமான விபத்து.
வறட்டி தட்டுவதற்கும்
வால் போஸ்டர் ஒட்டுவதற்குமே.....
வாத்தியாரில்லா பள்ளிச்சுவர்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|