வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

அவன் தன்
வேட்டைப்பற்களை மறைக்க
தேவதூதனையொத்தவொரு
அழகிய முகமூடியைத் தன்
அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட
பின்னரான பொழுதொன்றில்தான்
அவள் அவனைப் பார்த்தாளெனினும்
ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும்
அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை

அக்கழுகு
அழகிய பெண்களின் மாமிசப்பட்சி
அவர்தம் வாழ்வினைக் கொழுவி
உயிர் எஞ்சத் துண்டுகளாய்
வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும்
கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள்

அவள்
செந்தாமரை மலரொத்தவொரு
தேவதைக்குப் பிறந்தவள்
ஏழ்மையெனும் சேற்றுக்குள்
வனப்பு நிறைக்க மலர்ந்தவள்
அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா
அப்பாவிப்பெண்ணக் கழுகின்
கூர்விழிகளுக்குள் விழுந்தவள்

சுவனக் கன்னியையொத்த
தூய்மையைக் கொண்டவளின்
கவனம் பிசகிய கணமொன்றிலவன்
கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்
மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று
என்றுமே உணர்ந்திராதவொரு
விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று

நேசத்தினைச் சொல்லிச் சொல்லி
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி
தின்றரித்து முடிந்தவேளையில்
வாழ்வில் காணாவொரு துயரத்தை
அவள் கண்கள் விடாதுசொரிந்திட
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்
வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான்
இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர
அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின

ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து
சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும்
மீளப்பெறமுடியா இழப்புக்குமாக
வசந்தகாலத்து வனங்களின்
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்
அரணாக அவள் சூடிக் கொண்டாள்
இன்று
மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத்
தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள்
இடையறாது படகை
வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன



mrishanshareef@gmail.com