என்ன சொல்ல போகிறாய்?

கவிஞர் இரா.இரவி
 



பொழுது எல்லாம் உன்னைப் பற்றியே நினைப்பு
பொழுது போவதே தெரியாமல் ஆக்குகின்றது நினைவு!

முதல் சந்திப்பில் முழுவதுமாக என்னை விழுங்கினாய்
மற்ற சந்திப்பில் இமைக்காது என்னை நோக்கினாய்!

விழிகளின் வழியே மின்சாரம் எனக்கு ஏற்றினாய்
வஞ்சியின் பார்வையால் உருகும் மெழுகாக ஆக்கினாய்!

இதழ்கள் அசைத்து இனிமையாகப் பேசினாய்
இனிய மூளையின் மூலையில் நன்கு பதிந்தாய்!

கற்பனையிலும் வந்து இனிய காட்சி தந்தாய்!
கண்கள் மூடினால் கனவுகளிலும் காட்சியாய் வந்தாய்!

எனக்கு இன்பத்தை வாரி வாரி வழங்கினாய்
என்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாய்!

என்னை நீ காதலிப்பதால் பெருமைகள் தந்தாய்
எனக்குள் கர்வத்தை தந்திடும் காரணி ஆனாய்!

இதழ்ரசம் இனிதே பறிமாறி பரிதவிக்க விட்டாய்
இதழ்அமுதம் தந்து வாழ்நாளை நீட்டித்தாய்!

காதல் உணர்வு கனிஉணர்வு அவ்வுணர்வு
காதலர்கள் மட்டுமே உணர்ந்த தனிஉணர்வு!

சிறகுகள் இன்றி வானில் பறந்திட உதவும்
சிந்திக்க சிந்திக்க சிற்றின்ப நினைவு பெருகும்!

காதலிக்காதவர்களுக்கு இவ்வுணர்வு தெரியவே தெரியாது
காதலித்தவர்களுக்கு என்றும் மறக்க இயலாத உணர்வு!

பூமிக்கு வந்ததன் பயனை அடைந்தேன் உன்னால்
புவிஇன்பம் முழுவதும் புதைத்து வைத்துள்ளாய் உன்னிடம் !

காலத்தின் கோலம் நம்மை பிரித்து விட்டது
கண்ணால் கண்டால் போதும் காட்சிக்கு வாடி!

என்ன சொல்ல போகிறாய் என்னவளே
என்னோடு என்று நீ பேசுவாய் எதிர்பார்ப்பில் நான்!

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்