ஒரு நாள் தமிழன்......

சிந்தன

அலுவலக நாளொன்றில்
உணவருந்தும் வேளையிலே
உள்ளூர்க்கதை முதலாய்
உலகக்கதை வரையில்
அலசினோம் ஆராய்ந்தோம்!


தாய்மொழியில் பேசுவது,
தலைப்பாய் வந்ததின்று!

வெறும்பேச்சாய் துவங்கியது,
பெரும்சவாலாய் மாறியது!

புpறமொழியின் கலப்பின்றி
நாள்முழுக்க பேசுவதே,
எங்களுக்குள்
எழுந்த சவால்!

நண்பர்கள் நால்வருமாய்,
நாள்குறித்தோம் நாளையென!

எப்படியும் வெல்லவேண்டும்,
எல்லோரின் எண்ணவோட்டம்!

விடியல் வந்தவேளையிலே,
விழி திறந்து பார்க்கையிலே,
அம்மாவின் குரலோசை,
'காப்பி வேணுமா? டீ வேணுமா?'

'கா...' என்றிழுத்து,
'காப்பி' என்பது தமிழ்ச்சொல்லா?
குழப்பம்வந்து ஆட்கொள்ள,
'பால்' என்றே கேட்டுவைத்தேன்!

அம்மாவின் விழிகளில்
ஆச்சரியப்பார்வை!

வேகமாய் கிளம்பிவிட்டு,
வெளியே வந்து பார்க்கையிலே,
இருசக்கர வாகனத்தில்,
ஒருசக்கரத்தில் காற்றில்லை!
காற்றடித்தும் பயனில்லை!

பஞ்சராக இருக்குமோ!
பதைபதைத்தது நெஞ்சம்!

நடைபோட்டேன் வெளியே!
நடையில் நின்ற அப்பாவின் கேள்வி,
'வண்டியிலே போகலையா?'
விடையில்லை என்னிடத்தில்!

பஞ்சரென்று சொல்லிநானும்,
போட்டியிலே தோற்காமல்,
ஏதேதோ கையசைத்து,
எப்படியோ தலையசைத்தேன்!

அருகிலோர் சாலையிலே,
ஆட்டோவிற்கு காத்திருந்தேன்!

ஆட்டோவின் வருகைகண்டு,
'ஆ...' வென வாய்திறந்து....
ஆட்டோவும் தமிழில்லை!
அதற்குநிகர் தமிழ்வார்த்தை,
அதுவுமெனக்கு நினைவில்லை!

கடந்து சென்ற ஆட்டோவை,
கைதட்டி வரவழைத்தேன்!

அலுவலகம் உள்நுழைந்தால்,
அருகாமை தோழி வந்து,
'குட் மார்னிங்' எனச் சொன்னாள்!
'காலை வணக்கம்' பதில் சொன்னேன்!

ஏற இறங்க பார்த்துவிட்டு
எட்டிநின்றாள் அதன்பிறகு!

உணவருந்தும் வேளையிலே,
நால்வருமாய் வந்தமர்ந்தோம்!

ஆங்கிலச்சொல் வந்துவிட்டால்,
ஐயோ நாம் தோற்றிடுவோம்!

என்ன பேச?
எதனைப்பேச?
எல்லோர்க்கும் குழப்பந்தான்!

வாய் திறந்து மூடினோம்,
உணவருந்த மட்டுமின்று!

முப்பது நிமிட நேரமாய்,
மௌனம் தவிர வேறொன்றில்,
மொழியாய் பேச இயலவில்லை!


தமிழில் பேச முடியாமல்,
தடுமாறித்தான் போனோமே!

போட்டியிலே வென்றதுயார்?
பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!



chinthanep@gmail.com