வாழிய வாழிய தமிழே

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்
 

சர்வதேச தாய்மொழி தினம் (பிப்ரவரி 21)


சேய்மொழி மழலை சேல்மொழி துவலை
       சேர்மொழி யார்மொழி சிறகே
வாய்மொழி கவிதை வளர்மொழி உவமை
       மறைமொழி யார்மொழி தவமே
காய்மொழி கசப்பு கனிமொழி இனிப்பு
       காதலர் புதுமொழி கரும்பே
தாய்மொழித் தினமே தாரணி வசமே
       சந்ததி வியந்திடும் மனமே !

செம்மொழி சிலிர்க்கும் செகமெலாந் திறக்கும்
       சிலம்பிடும் மதுரையே சிறக்கும்
அம்புரி ராமன் அயோத்தியா மன்றம்
       அதிர்ந்திடும் கம்பனின் அரங்கம்
வெம்பனி மருங்கில் விறகிடும் நெருப்பில்
       விளைந்தது நளனொடும் விதியே
கும்பிடும் பொழுதும் குவலயம் காட்டும்
        குருத்தெலாம் தாய்மொழித் தினமே!

சோமசுந் தரர்க்குத் தோட்டமும் வெருளிச்
       சிறப்பினைக் கொடுத்தது கவியே
காமமும் செப்பக் கனிந்தது குறளே
       கருத்தினில் மகிழ்ந்;தது உலகே
பூமறை யாகப் பொலிந்தது தமிழே
       புத்தக மாயருஞ் சோதிக்
கோமமும் ஏற்றும் தீபமும் கொண்டு
       குவலயம் ஆகினள் தமிழே !

ருத்திர மூர்த்தி கருத்திடப் பல்லோர்
       ஓங்கிய மாகவி யன்னார்
முருகயன் சில்லை மொழிந்திடுங் காரை
       முத்தமிழ் வித்தகர் மூத்தோர்
பெருஞ்சிவத் தம்பி கைலாச பதியும்
        புதல்வராம் தனிநாய கத்தும்
அருந்திறல் மாந்தர் அறிஞரைக் கண்டோம்
        அகன்றநம் தாய்மொழி அகத்தே!

தாய்மொழி தினமே தமிழர்தம் அறமே
        சந்ததம் மானிடச் சரமே
தூயஅம் மொழியே செந்தமிழ் மகளே
        செப்பிடும் பொன்மணிச் சிறகே
நேயமும் மனித நேர்த்தியும் வாய்மை
        நித்திலத் துள்மொழி நிலமே
வாய்மொழி விருத்தம் வகுத்தனித் தினமே
        வாழிய வாழிய தமிழே !


 

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்