அவமானமல்ல அடையாளம்
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
(குறள்வெண்
செந்துறை)
கருவறையின்
அதிர்வாகிக் கடந்துவந்தெம் உயிரில்
கலந்தங்கு நிறைந்ததுதான் அன்னையவள் மொழியே!
உருவடைந்து உலகடைந்து உலவுகின்ற பொழுதும்
உயிர்க்காற்றாய் உள்நுழைந்து உறைந்ததுதாய் மொழியே!
தாய்மடியில்
தவழந்திருக்கத் தாவியவள் தோளில்
தலைசாய்த்துத் தூங்கிவிடத் தாலாட்டும் மொழியே!
வாய்மொழியாய்த் தொடர்பாடல் வழிமட்டும் அல்ல
வாழ்வெனவே வரித்தெம்முள் வளர்ந்ததுதாய் மொழியே!
சிந்தனைக்கு ஊற்றாகிச்
சிறக்கஅறி வூட்டும்
செம்மாந்த பண்பாட்டில் செல்லவழி காட்டும்
முந்தையரின் நாகரிக முதிர்ச்சியினை நாட்டும்
முழுமையுற்ற இனமொன்றின் முகவரிதாய் மொழியே!
அன்னைமொழி கல்லாத
கல்வியென்ன கல்வி
அவள்மொழியைப் புரியாத கடவுளென்ன கடவுள்
அன்னைமொழி எமக்கொன்றும் அவமானம் அல்ல
அடையாளம் எனஅறிவோம் அகிலத்தை வெல்ல!
நோயினிலும்
முதுமையிலும் நொடிந்துவிட்ட போதும்
நொந்துமனம் நைந்துபலம் நொருங்கிவிட்ட போதும்
பாயினிலும் பாடையிலும் படுத்துவிட்ட போதும்
பைந்தமிழாம் தாயினைநாம் பற்றிநிற்க வேண்டும்!
சர்வதேச தாய்மொழி தினம் (பிப்ரவரி 21)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்