நாளும் முயன்றிடுவோம்
கவிஞர் அ.இராஜகோபாலன்
உன்றன்
மொழியோர் ’உயர்மொழி’ என்றிடில்
ஒன்றும் பிழையில்லை – அதன்
உயர்வை யுணர்ந்தே உவகை கொள்வதில்
ஒன்றும் தவறில்லை.
என்றன்
மொழிதான் உலகிலு யர்ந்ததென்
றுரைப்பது சரியில்லை – இங்கே
ஏசிப் பிறமொழி பேசிடு நன்பரை
எள்ளுதல் முறையில்லை.
ஒன்றாய்த்
தாய்மொழி உலகிலு ளோர்க்கொரு
உரிமையில் உளதாகும். – அந்த
ஒவ்வொரு மொழியிலும் உயர்படைப் பென்பவை
ஒருநூ றுளவாகும்.
நன்றாய்ப்
பிறமொழி நூல்பல மாற்றி
நம்மொழி சேர்த்திடுவோம். – இன்னும்
நம்நூல் பலவும் பிறமொழி மாற்ற
நாளும் முயன்றிடுவோம்.
சர்வதேச தாய்மொழி தினம் (பிப்ரவரி 21)
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|