சர்வதேச தாய்மொழி தினம்
கவிஞர் வெ.நாதமணி
(கலிவெண்பா)
தங்கள்
மொழிகாக்கத் தம்முயிரைத் தாமீந்த
வங்காள மாணாக்கர் வன்மையினால் பெங்காலி
என்னும் மொழிதன் பெருமையினை ஏற்றதனால்
அன்னார் நினைவேந்தல் நாளாக ஆண்டிலொரு
நாள்தாய் மொழிநன்னாள் என்றுலகு நண்ணியே
தாள்பணிந்து தத்தமது தாயை வணங்கற்போல்
பிப்ரவரி மாத இருபத்தோ ராம்நாளில்
ஒப்பி உலகொடு ஒன்றியேக் கொண்டாடி
தங்கத் தமிழினமும் தம்மொழிமேல் என்றென்றும்
மங்காதப் பற்றுடனே மன்பதையில் தங்களது
சந்ததியர் தாய்மொழியில் பேசும் படியாக
செந்தமிழை நாப்பழக்கம் செய்வதுவே தம்கடமை
என்றிந்த சர்வதே சத்தாய் மொழிதினத்தில்
நன்றுணர்ந்து கொள்ளல் நலம்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|