சர்வதேச தாய்மொழித் தினம்
புலவர் முருகேசு
மயில்வாகனன்
தாய்மொழிக்கோர்
அங்கிகாரம் தந்ததுவே சர்வதேசம்
தாயின் மொழியெதுவோ அம்மொழிதான் - சேய்மொழியாம்
தப்பின்றிக் கற்பித்துத் தம்மினத்தைக் காப்பதுவே
இப்பிறப்பின் நோக்கமின்று ணர்.
அன்னை மொழிக்காய் ஆற்றலுடன் போராடி
இன்னலுற்ற எம்மினமே எங்கொற்றாய் - தன்மானம்
காக்கும் தமிழினமே காலத்தின் கோலமிது
ஊக்கந்தான் என்றும் உயர்வு.
மொழியாய்வு செய்வோரின் மேலான கூற்று
அழிவில்லாச் செம்மொழிகள் ஆறு - விளிப்புடை
எம்மொழியும் ஒன்றேகாண் என்றறிந்தே கூறிவிட்டார்
அம்மொழியைக் கற்றிடுவோம் ஆய்ந்து.
மேல்நாட் டறிஞர்கள் மேன்மைகண் டாய்கிறார்கள்
ஆல்போல் வளர்ந்த அருந்தமிழை - தொல்பொருள்
ஆய்வாளர் ஆய்வினால் அற்புதங்கள் ஓங்குவதால்
தேய்மானம் ஏதுமில்லைத் தேர்.
பொன்வாத்து முட்டைகளாய்ப் போற்றுபல நூல்களுடைக்
கன்னித் தமிழாள் கவினொளிர் - பொன்மகளாய்ப்
பாரெங்கும் கோலோச்சும் பாவையின் கண்ணோட்டம்
பேரின்பம் தந்திடுமே பேறு.
இயல்இசை நாடகம் ஈர்க்கும் கலைகள்
அயல்நாட்டார் கண்டுகளி கொண்டே – வியந்திடுவர்
பட்டிமன்றப் பேச்சாளர் பார்ப்போர் மனங்கவரப்
பட்டறிவைக் காட்டிடுவர் பார்.
புலம்பெயர்ந்து வந்தோர் புதுமையென் றெண்ணிப்
பலமாம் தமிழ்மறந்து பற்றாய் - அலமரல்
காரணமாய் வேற்றுமொழி கற்பிக்கும் காலமிது
கூரறிவு தாய்மொழியால் தான்.
அலமரல் - அச்சம்
மொழியாளம் உள்ளவரே மேலா சிரியர்
வழியறிந்து கற்பிக்கும் வாய்ப்பு - களிப்புடனே
மாணவர்கள் கற்று மகிழ்ந்தால் மொழிவளரும்
மேன்மையுறும் செந்தமிழின் மாண்பு.
தாய்மொழியாம் எம்மொழியை ஏற்றமுற வைப்பதற்கு
வாய்ப்புப் பலவுண்டே வாழ்விடத்தில் -
காய்வின்றி
வீட்டுமொழி யாய்ஏஎ விருப்புடன் பிள்ளைகட்கு
ஊட்டியே கற்பித்தல் நன்று.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|