தமிழை வளர்ப்பது யார்

பாவலர் கருமலைத்தமிழாழன்


பிறந்திட்ட குழந்தையிடம் அம்மா வென்றும்
         பிறப்பித்த தந்தையினை அப்பா வென்றும்
பிறறழைக்கத் தனித்தமிழில் பெயரைச் சூட்டிப்
         பிறமொழிதாம் கலவாமல் பேச வைத்து
நறவான தமிழ்ப்பற்றைக் குழந்தை நெஞ்சில்
         நன்றாகப் பெற்றோர்தாம் வளர்த்தி ருந்தால்
புறம்போக்காய்த் தமிழ்த்தாயைத் தெருவில் விட்டுப்
         புரியாத மொழிபேசித் திரிய மாட்டார் !

திருத்தமுற ஆசிரியர் வகுப்ப றையில்
        தீந்தமிழின் உணர்வூட்டிச் சுவையை உட்டி
அருமையான இலக்கியங்கள் அமுதை ஊட்டி
        அறிவியலும் உள்ளதெனும் கருத்தை ஊட்டிப்
பெருமிதமாய் அகம்புறத்தின் பொருளை ஊட்டிப்
        பேரரசர் பார்வென்ற வீரம் ஊட்டிக்
கரும்பென்றே பதித்திருந்தால் மாண வர்கள்
        கசப்பென்றே பிறமொழியில் கற்க மாட்டார் !

ர்வலர்கள் எனச்சொல்லி மேடை நின்றே
       அடுக்குமொழி பேசுவதால் வளர்ந்தி டாது
ஊர்தோறும் உள்ளபள்ளி அனைத்திற் குள்ளும்
       உயர்தமிழில் கற்பிக்கச் செய்தல் வேண்டும் !
ஆர்தமிழில் படித்தவரோ அவர்க்கே வேலை
       அரும்சட்டம் அரசாங்கள் செய்து விட்டால்
சீர்பெற்றுத் தமிழ்மொழிதாம் வளர்ந்தி டாதோ
       சிந்திப்பீர் இதைச்செய்யச் சேர்வோம் ஒன்றாய் !


 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்