பூக்களே வாழ்க ! வாழ்க !
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
உலக மகளிர் தினம் (மார்ச் 8)
தாயவள் கருவே தாங்கும்
தத்துவம்! தரிப்புக் கான
நேயமண் வைத்தி ருக்கும்
நிலைக்களம்! நிலவுத் திங்கள்
பாயரும் ஒளிக்கு டத்துப்
பகர்மொழி ! பருவப் பூமிச்
சேயரின் வடிகாற் பூக்கள்!
சில்லிடும் கருப்பூ தானே!
மாதரின் தினமே! இன்று
மகளிரின் வனமே ! வண்ணச்
சாதனை யுகமே ! காதற்
சந்ததிக் கரமே !சாற்றும்
போதனைச் சிறகே !வாழ்வின்
பூக்களே! புனித மாக்கும்
நாதனின் குருவே! நாளைத்
திருக்குறள் நீதான் அம்மா!
நூறெனப் பல்லா
யிரங்கள்
நுள்ளிடச் செத்தோம்! வஞ்சர்
ஆறென அடித்துச் செல்லும்
அவலத்திற் செத்தோம் !இன்னும்
ஊரென இருந்த மண்ணில்
ஏவிடும் குழுக்கள் தீட்டும்
கூரிய வாளிற் செத்தோம் !
கொடுமையிற் குளித்தோம் அம்மா!
மாதவள் உயிர்ப்புக்
குள்ளே
மாறிடும் இழப்புத் தானே !
கீதமே அவளென் பேனே
குத்திடும் கருவின் ஈட்டி
வேதனை அளிக்கும் செய்தி
விரையிடும் பூமா தேவிப்
போதனை மகளே வாழ்க!
பூக்களே வாழ்க! வாழ்க!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|