பெண்ணின் பெருமை பேசுவோம்

புலவர் முருகேசு மயில்வாகனன்
 


ன்னை அகத்திருக்க ஆற்றலோங்கும் பிள்ளைகட்கு
உன்னத வாழ்வும் உயர்ந்தோங்கும் – அன்பொளிரும்
இல்லற வாழ்வும் இனிக்குமே கொண்டவர்க்கு
அல்லல்தான் ஏது அறி.

வீட்டின் இலட்சுமியாய் வீறுநடை போடுகின்ற
ஊட்டுசக்தி கொண்டவளே உண்மையாம் – வீட்டரசி
தாயாய்ச் சகோதரியாய் தாதியாய் மந்திரியாய்
தேயாப் பணிசெய்வாள் தேர்.

ல்வியிலே மேம்பாடு காட்டுகின்ற காட்சியின்று
வல்ல தொழில்களில் வாய்ப்பவர்க்கு – நல்ல
தலைவியாய் நாடாள் தகைமையும் கொண்டோர்
கலைகளிலும் ஓங்குகின்றார் காண்.

பெண்ணின் பெருமையைப் பேசுகின்ற வள்ளுவத்தை
வண்ணமாய் ஆய்ந்தறிந்தே வல்லமையாய்க் கற்பவர்கள்
நண்ணிடுவர் நற்பயனை நாளும் நலிவின்றி
வண்ணமிகு நங்கையரால் வாய்ப்பு.

டம் பரமின்றி ஐயமிலா வாழ்வுக்கு
தேடற் குரியவளைத் தேர்ந்துகொண்டால் – வாடிடாமல்
ஈடாட்டம் ஏதுமற்றே ஏற்றமுறு வாழ்வென்றும்
வாடாதே வாழ்வவரால் வாய்ப்பு.

விட்டுக் கொடுத்தே வினைசெய்து வேட்புடனே
திட்டமிட்டு ஆற்றுகின்ற செய்பணியால் – முட்டிமோதும்
வாய்ப்பகல வாழ்வும் சிறந்தோங்க தாய்தந்தை
சேய்களுடன் சேர்ந்துவாழும் சீர்.

பொருள்வேண்டும் வாழப் பெருமை பெறவோ
கருணையுடன் அன்பும் கலந்த – திருவுடை
இல்லாள் இணைந்திட இன்பந்தான் மேலோங்கும்
செல்வச் செழிப்புமுண்டே தேர்.
 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்