அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்

தீபச்செல்வன்

இரவு திசைகளை தின்று
பரபரத்துக்கொண்டிருக்க
நீ புறப்பட்டிருந்த கடலை
யாரோ தின்றுகொண்டிருந்தனர்.
கையில் இழுபட்ட
பிள்ளைகளின் மெலிந்த
தோள்ககளைத் தவிர
ஒன்றையும் எடுத்துவரவில்லை.

அலைச்சலின் பெருந்துயர்கள்
கடலில் உன்னை துரத்தி வந்தது
வலியின் கோடி முகங்கள் சுற்றியிருக்கிற
உன்னை நான் சந்திக்கப்போவதில்லை.
வளர்ந்துபோயிருக்கிற
தோல்வியின் சொற்கள் எதையும்
பகிரவேண்டாம்.
ஞாபகங்கள் துடித்துக்கொண்டிருக்கிறது.

நடைகள் நிறைந்த மணலையும்
துண்டு நிலத்தின் பெரும் புகையையும்
சுருட்டி எடுத்து வந்து
பூவரசின் வேரை பன்றிகள் தின்னுகிற
கவிதை கொண்டு வந்திருக்கிறாய்.
அந்தப் பூவரசு சலசலத்துக்கொண்டிருந்த
பின்மாலையில்
முகத்தை கரைத்துத்தானே வழியனுப்பினாய்.

பன்றிகள் கிளறியெறிந்த வீதியில்
அந்த பூவரச மரத்தினடியில்
கிடக்கிறது நான் உன்னை சந்திக்கிற பொழுதுகள்.
நீ வைத்திருக்கிறாய்
பூவரச மரத்தின் துயர் படிந்த கிளைகளையும்
கிளறுப்பட்ட வீதியின் துகள்களையும்.

நீரை விரித்துக்கொண்டிருக்கிற
அடரும் கொடிய இரவில்
காற்றில் பன்றிகள் முட்களுடன்
வந்தன என்கிறாய்.
தனித்துப் புறப்பட்ட பயணத்தில்
எல்லாமே கரைந்துபோகிறது.

வெறுமையின் கீழ் குந்தியிருக்கிற
உன்னை பார்க்கப்போவதில்லை.
நம்பிக்கை தரமுடியாதிருக்கிற
உரையாடல் ஒன்றும் உன்னுடன் வேண்டாம்?
கூடாரத்தில் மணல் உதிர்ந்து
உன்னை மூடிக்கொண்டிருக்கிறது.

காய்ந்துவிடாத குருதியையும்
மணல் குடித்து முடிக்காத கண்ணீரையும்
கொண்டு வந்திருப்பாய்.
கரை அரிபட்டுக்கொண்டிருக்கிற கடலை
நீ இறங்கிய பிறகும்
யாரோ தின்றுகொண்டிருக்கின்றனர்.

 

deebachelvan@gmail.com