இளமையோடு
ஒரு பழைய காதல்
ஜாவிட் ரயிஸ்
இன்றோ நாளையோ
இறக்கவிருக்கும் மரங்களில்
இளமையோடு துளிர்க்கும்
மலர் சிசுக்களாய்...
புதுப்புது எதிர்பார்ப்புகளோடும்
விடை தெரியா கேள்விகளோடும்
என் கிழட்டுக் காதல்;
◙
தள்ளாடித் தள்ளாடித்
தேடுகின்றேன்
தொலைந்து போன
பழைய நினைவுகளை...
◙
அந்த மரத்தில் தானே
செதுக்கினோம்
உன் பெயரை நானும்...
என் பெயரை நீயும்...?
எம்மைப் போலவே- காலம்
மரத்தையும் விட்டுவைதில்லை
நரைத்த தலையுடன்
நின்றிருக்கிறது.
◙
புதுப்புது காதல் தடங்களை
தாங்கியிருக்கிறது
படுத்துறங்கிய புல்வெளி!
◙
இந்த இடத்தில் தானே
கைக்கோர்த்து நடைபயின்றோம் ?
ஆமாம்!
இதே இடம் தான்!
இருமருங்கிலும் எழுந்து நின்று
நிழல் பாய் விரித்து
காதலர்களை வரவேற்கும்
பெயர் தெரியா இம்மரங்கள்
'அவள் எங்கே?'
உன்னை தான் விசாரிக்கின்றன
◙
இந்த மரங்களுக்கு
நினைவிருக்கும் நம் காதல்
உனக்கு நினைவிருக்குமோ?
◙
நீ பற்றியிருந்த என் கரங்களில்
தொற்றியிருக்கும்
என் பேரனின் குரல்
இழுத்தெடுக்கிறது என்னை
மீண்டும் நிகழ்காலத்துக்கு
'தாத்தா நேரமாகிவிட்டது
பாட்டி தேடுவாங்க'
◙
என் கேள்விக்கு இல்லாவிட்டாலும்
அந்த மரங்களின் கேள்விக்காவது
விடை சொல்
'நீ எங்கே இருக்கிறாய்?'
jawidraiz@gmail.com
|