கதைக்குள் கதை...........

சிந்தன்



அதிகாலை வேளை!
அழையா விருந்தாளியாய்,
சுட்டெரிக்கும் சூரியனும்
'எவருமுண்டோ உள்ளே' என
எட்டிப்பார்க்கும் குடிசை!

அடுப்பிலேவெந்த இட்டிலியை
ஆளுக்கொரு வாய் உள்ளேதள்ளி,
வெளியே செல்வதற்கு
வீட்டினை பூட்டி,
அப்பாவின் கால்கள் மிதிக்க,
அவர்மகளின் கண்கள்
எதையோ
எதிர்நோக்க,
மிதிவண்டியில் துவங்கியது
மற்றுமொரு நாள்!

மைல்கள் சில கடந்தபின்னர்,
மதிய உணவு சகிதமாய் இறங்கி,
'மாலை வாருங்கள்' என
கையசைத்து விடையனுப்பி,
கட்டிடத்தின் உள்நுழைந்தாள்!

தந்தையும் புறப்பட்டார்
தன்வழிநோக்கியே!

'அம்பத்தூர் எக்ஸ்போர்ட் லிமிடட்'

அழகாய் துணிதைத்து
அயல்நாட்டுக்கனுப்பிவைக்கும்
ஏற்றுமதி தொழிற்சாலை!

மேலாளர் பார்த்தவுடன்
முதல்மாடி போகச்சொன்னார்!
மூச்சிறைக்க மேலே போனேன்!
முதல் நாளாயிற்றே இன்று!

மாடியிலே சென்று பார்த்தால்,
மூட்டை மூட்டையாய் துணிகள்!

நின்றுகொண்டே வேலைபார்க்கும்
நூற்றுக்கணக்கில் பெண்கள்!
வேலைதனை கற்றுக்கொள்ள
வள்ளியென்ற பெண்ணருகில்
நிற்கச்சொல்லி உத்தரவு!

'நாள் முழுக்க நிக்கணுமா?'
வள்ளியிடம் கேட்டுவைத்தேன்!

'ஹெல்பரென்றால் நிக்கணுந்தான்!
தைப்பதற்கு தெரிந்திருந்தால்
உட்கார வாய்ப்பிருக்கு!
காலால் மிதிப்பதிருக்கே.......
நிற்பதுவே மேல் அதற்கு!'

நின்றுகற்றேன்!
நிற்கவும் கற்றேன்!

ஆண்டாண்டாய் வேலைபார்த்த
அப்பாவின் தொழிற்சாலை
அறிவிப்பு ஏதுமின்றி
அடைத்துவிட்ட நிலைமையிப்போ!

பனிரெண்டாம் வகுப்பினையும்
பாதியிலே நிறுத்திவிட்டு
சேர்ந்துவிட்டேன் வேலையிலே,
சோர்ந்துவிட்ட அப்பாவின்
சுமையிறக்கி உதவிசெய்ய!

வேலை முடிந்த மாலையிலே
வெளியேநின்று காத்திருந்தேன்
தந்தை வருகை எதிர்நோக்கி!
'காமராசர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி'

மகள்சென்ற கட்டிடத்தை
மலைப்பாக நின்று பார்த்தேன்!
பச்சைநிற சீருடையில்
பெண்களின் அணிவகுப்பில்!

புள்ளியாய் மறைந்து
பள்ளிக்குள் நுழைந்தாள்!

வெள்ளையங்கி அணிந்துகொண்டே
வியாதிகளை விரட்டிவிடும்
வீரமிக்க மருத்துவராய்
விரைவில் பார்க்க எனக்காசை!

வண்டியிலே வேகமெடுத்து
வேலையிடம் வந்தடைந்தேன்!

முதலாளி பேசுவதாய்
முரசொலித்த ஒலிப்பெருக்கி!

'நட்டத்திலே நாமிருக்கோம்,
ஊதியமில்லை இம்மாதம்!
கொடிபிடித்து நிற்காமல்,
கடுமையாய் உழைத்திடுங்கள்!
கம்பெனியை உயர்த்திடுங்கள்!'

கோடிகளாய் கொட்டியபோது
கிள்ளிக்கூட கொடுத்ததில்லை!
நட்டம்வந்த வேளையிலே
நசக்கப்படுவது எங்கள்தலை!

நிலை நினைத்து
நொந்துகொண்டே

இருபதாண்டாய் பழகிவரும்
இயந்திரங்கள் தொட்டுப்பார்த்தேன்!

முதலாளியின் வார்த்தைகளும்,
மருத்துவர் உடையில் மகளும்வந்து
மிரளவைத்தனர் வேலையிடையே!

மாலைவந்த வேளையிலே
மகள் படிக்கும் பள்ளிநோக்கி
மிதிவண்டி ஓட்டலானேன்!

காலை இறங்கிய
கட்டிடத்தின் வாயிலிலே
காத்திருந்தாள் மகளும்!
வந்துசேர்ந்தார் தந்தையும்!

மகளும் தந்தையுமாய்
மிதிவண்டியில் பயணித்தே
அன்றையதின நிகழ்வுகளை
அசைபோட்டே சென்றனரே,
நாளை விடியுமென்ற
நம்பிக்கையின் மகிழ்வுடனே!


chinthanep@gmail.com