தமிழ்த்தேனீக்கு கண்ணீர் அஞ்சலி
கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை
தமிழ்த்தேனீ அன்பென்னும்
அமுத ஊற்றே
தமிழொன்றே வாழ்வென்ற மூச்சுக் காற்றே
அமிழ்தெனினும் வேண்டாதார் தமிழி ருக்க
அதுவொன்றே உயிராக வாழ்ந்த வாழ்வே
தமிழுக்கு மறுபெயரை சூட வேண்டின்
தனிப்பெயராய் நின்பெயரைத் தாங்கி நிற்க
தமிழன்னை விருப்பமுடன் முன்னே நிற்பாள்
தமிழாக வாழ்ந்தவரே எங்கே சென்றீர்!
காலனவன் ஐயத்தைத் தீர்த்து
வைக்க
கையோடு உமையழைத்துச் சென்றிட் டானோ
சீலமுடன் செந்தமிழைப் பயில்வ தற்கு
சிந்தையிலே இரக்கமின்றி உமைக்கொண் டானோ
ஞாலமெலாம் தமிழ்பரப்பி நூல்கள் செய்து
ஞாயிறெனத் திங்களொளி தந்த தாலே
காலமெலாம் அருகிருக்க அழைத்திட் டானோ
கண்ணீரில் எமையாழ்த்தும் செய்கை நன்றோ
இலக்கியத்தின் இமயமென
வாழ்ந்த வள்ளல்
எவர்மனதும் நோகடிக்கா இதயச் செம்மல்
அலட்சியமாய்க் கவிதைகளை அணுகா அண்ணல்
அதிலிருக்கும் சிறப்பொன்றே காணும் கன்னல்
மலர்ந்தமலர்ச் சிரிபுபதனை முகத்தில் தேக்கி
மாறாத நட்புடனே கூடுந் தென்றல்
நிலவுலகின் நிலையாமை காட்டு தற்கு
நெஞ்சமெலாம் நிறைந்துவிட்டுச் சென்ற தேனோ!
கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|