மோனமாய்ச் சென்று மறைந்த தெங்கே?

கவிஞர் இனியன், கரூர்  (பேராசிரியரின் மாணாக்கர்)
 


 

மோகன் என்றோர் முத்தமிழ் அறிஞர்
         மோனமாய்ச் சென்று மறைந்த தெங்கே? –தமிழ்த்
தாகம் தீர்த்த தண்டமிழ் ஆசான்
         தரணியை விட்டுத் தாவிய தெங்கே? – மாதொரு
பாகன் மாதினைப் பாதியில் பிரிந்து
         பறந்து சென்றது பரத்தில் எங்கே? –மக்கள்
சோக மயமாய் சோர்ந்து வீழ்ந்து
         செய்வ தறியா சூழ்நிலை இங்கே!- நாளும்

கப் பட்டதை எழுதிக் குவித்த
         எழிலார் கைகள் எங்கே எங்கே? .தமிழில்
ஆகச் சிறந்த ஆய்வினை எல்லாம்
         அழகாய் நிகழ்த்திய அறிஞர் எங்கே? –தமிழ்
வாகனம் ஓட்டிய வல்லமை யாளர்
         வானில் சென்று வாழ்வ தெங்கே? –யானைப்
பாகனை இழந்த யானைகள் போல
         பதறித் துடிக்கும் பாங்கர் இங்கே!- அதி

வேகம் எடுத்து வினைக ளாற்றிய
         வேந்தர் இன்று விரைந்த தெங்கே? –ஒரு
யாகம் போல அன்பினை நோற்ற
         அதிசய மனிதர் ஆனவர் எங்கே?- அந்த
மோகனப் புன்னகை மீண்டும் ஒருநாள்
         மலருமா என்னும் மனத்தர் இங்கே! - இரா
மோகன் என்றோர் முத்தமிழ் அறிஞர்
         மோனமாய்ச் சென்று மறைந்த தெங்கே?
 

கவிஞர் இனியன், கரூர் 
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்