பேராசிரியர் இரா.மோகன்
திருத்தசாங்கம்
கவிஞர் இனியன், கரூர்
பாகன் எனப்படும் பைந்தமிழ்த் தேரோட்டி
மோகம் மிகவேதான் முன்நிற்பார் - மேகமே
வேகம் விவேகம் இணைந்தநல் ஆசானை
மோகன் எனநீ முழங்கு.
சீரது கொண்டு சிறப்பாய் எழுதிட
யாரது என்றால் அவரேதான் - தாரகையே
பாரதம் ஓட்டும் பழந்தமிழ் நம்பிக்குப்
பாரத நாடாம் பகர்.
மதுரத் தமிழில் மதுவை நிகர்த்த
மதுரக் கவிகள் பொழிவார் - மதுவே!
மதுவைத் துறந்தநல் மக்கள் வசிக்கும்
மதுரை அவர்வாழ் நகர்.
உற்றார் உறவு உறுபுகழ் நட்புடன்
நற்றமிழில் பேசிடும் நாவலர் - பொற்றேர்
உழவர் விரும்பும் உறுதுணை யாகும்
அழகான வைகையாம் ஆறு.
சோலைவாழ் வண்டன்ன சோர்வின்றித் தேடிநல்
நூலை வடிக்கும் நுணுக்கம் மிகவே
எமதருமைப் பேராசான் ஈட்டுபுகழ் எல்லாம்
இமய மலைக்கே இணை.
விரும்பி எழுதி விதைத்திடும் வித்தே
அரும்பி மலரும் அழகாய் - சுரும்பே!
அறிவக ஆசான் அமைத்திட்ட ஊர்தி
அறிவே எனநீ அறி.
மொழியே விழியென நாளும் மொழிந்தார்
பழிதீர் தமிழில் படைத்தார் அவரிடம்
வாணாள் முழுவதும் வண்டமிழ்க் கற்றநல்
மாணவர்க் கூட்டம் படை.
காவியம் கட்டுரை யாவிலும் வித்தகர்
பாவியம் கண்டு படைப்பதில் வல்லவர்
முத்தான சொத்து முழுதாய் நிறைந்துள்ள
முத்தமிழே நல்ல முரசு.
குற்றால நீரெனக் கொட்டும் உரைவளம்
வற்றா இருப்பென வண்டமிழ் இருக்குமே
நற்றமிழ் வல்லநல் நிர்மலா என்கிற
பொற்றா மரைத்தார் புனைந்து.
மண்ணிலே நல்லவண்ணம் வாழ்கின்ற மாத்தமிழன்
கண்ணிலே வைத்தவரைப் போற்றுவேன் - வெண்குருகே!
கண்ணாக நாட்டைக் கருதுவார் என்றும்மூ
வண்ணக் கொடியே கொடி.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|