வெற்றியும் தோல்வியும்

கவிஞர்  கு.மா.பா.திருநாவுக்கரசு
 


நாணயத்தின் இருபுறம்தான் வெற்றி தோல்வி!
நடுவர்கை விரல்சுண்டும் வெள்ளிக் காசில்,
காணுமணி பூ தலையால் வெற்றி கண்டும்;
களத்தினிலே பெறுவதுதான் உறுதி வெற்றி!
நாநயந்தான் வழக்காடும் உரைஞருக்கு
நடுவர்முன் தரும்மன்றில் வெற்றி தோல்வி!
ஆனந்த வெற்றிதன்னை நுகர்பவர்க்கும்,
அனுபவத்தின் படிக்கல்லாய் மாறும் தோல்வி!

வாள்வீசி படைவெல்லும் மன்னன் வீரம்
மஞ்சத்தில் வேல்விழிமுன் வீழ்ந்தால் வெற்றி!
தாள்பணிந்து குருவிடத்தில் கற்ற கல்வி,
தருணத்தில் விஞ்சுவதே கலையின் வெற்றி!
சூளுரைத்து அறவழியில் கொள்கை சொல்லி
தூய்மையுடன் வெல்வதுதான் தேர்தல் வெற்றி!
ஆள்மாற்றி அத்துமீறி தோல்வி மாற்றி
ஆள்பவரே கோல்மாலால் குவிப்பார் வெற்றி!

னத்தாலும் மதத்தாலும் பிளவின் வெற்றி,
இணக்கத்தைச் சிதைக்கின்ற மனிதத் தோல்வி!
கணக்காக இருப்போர்முன் இல்லாதார்க்கு
கடன்பட்டார் நெஞ்சம்போல் வருத்தும் தோல்வி!
சுணக்கமுற்ற முயலுறங்க ஆமை வெற்றி,
சுட்டுவதே 'முயலாமை' என்னும் தோல்வி!
பிணக்கெதற்கு வெற்றிதோல்வி கலந்த வாழ்வில்,
பேதமின்றி சமதர்மம், ஒருமை காப்போம்!
 

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்