மக்கட்பேறு  (நால்விருத்தம்)

கவிஞர்  கே.பி.பத்மநாபன்





வெளிவிருத்தம் :

நல்லோர் இல்லறம் நாளுமே சிறந்திட - நன்மக்கள்;
எல்லோர் இல்லமும் ஏற்றமாய் விளங்கிட -நன்மக்கள்;
நல்லோர் செல்வமாய் நன்மனை பெறுவது - நன்மக்கள்;
இல்லார் வாழ்விலும் ஏற்றநல் உயர்நிதி - நன்மக்கள்!

அறுசீர்விருத்தம்:

பஞ்சை விஞ்சும் மென்மையதாம்
பட்டுப் போன்ற சிறுகையால்
கஞ்சி கூழை அளைந்திட்டால்
கனிந்த அமிழ்தின் மேலாகும்;
கொஞ்சும் மொழியோ செவிக்கின்பம்;
கொள்ளை இன்பம் மெய்தீண்டல்;
விஞ்சும் இன்பம் வேறேது?
வினைப்ப யன்தான் நன்மக்கள்!

கலிவிருத்தம்:

ஈன்ற தாயினுக் கிங்குவப் போங்கிட
ஆன்ற மாண்பினை அத்தனும் பெற்றிட
சான்ற கல்வியைச் சக்தியாய்க் கொண்டவன்
தோன்ற லாயிடின் தூயநல் பேறதே!

வஞ்சிவிருத்தம்:

தந்தை தாயினைப் போற்றிடும்
சிந்தை கொண்டநல் மக்களை
இந்த வாழ்வினில் பெற்றவர்க்குப்
பிந்தை வாழ்விலும் பேறதே !



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்