கறுத்த ஜுலை வெளுத்து வரும்!
கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா
தலைவிரித்து
இனவாதம் ஆட்டம் போடத்
தறிகெட்டு அரசதற்குத் தாளம் போடக்
கொலைவெறியர் கும்மாளக் கூச்ச லோடே
குறிவைத்தார் தமிழினத்தைக் கூறு போட!
விலையற்ற தென்றுயிர்கள் உடமை யெல்லாம்
விறகாக்கி நெருப்பிட்டார் இலங்கை மண்ணில்!
குலைநடுங்கிப் போனதுவே உலகும் கூடக்
குறுகிப்போய்க் கறுத்ததுவே ஜுலைத் திங்கள்!
அடிபட்டு
உதைபட்டு வாழும் வாழ்வும்
அடங்கிமெய் ஒடுங்கிவிடும் அவலப் போக்கும்
குடிமையினைப் பறிகொடுக்கும் துயரக் கேடும்
குற்றேவற் கொத்தடிமை நிலையும் மாறும்!
முடிசூடித் தமிழ்வாழ்ந்த ஈழ மண்ணில்
முழுதான அரசொன்று முகிழும் காலம்
விடிவாகும் நல்வாழ்வு தமிழர்க் கங்கே
வெளுத்துவரும் கறுத்துவிட்ட ஜுலைத் திங்கள்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|