அரசைக் கைது செய்வோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
விஞ்சுகின்ற போதையினைத்
தருவ தாலே
விற்பனைக்குத் தடைசெய்த பொருளா மென்றே
கஞ்சாவை விற்றவரைக் கைது செய்து
காவலர்கள் அடைத்தார்கள் சிறையி னுள்ளே !
நஞ்சாகும் வாழ்க்கையினை நாச மாக்கும்
நல்லறிவை மழுங்கடித்து மயங்க வைக்கும்
எஞ்ஞான்றும் உடலுக்குத் தீமை செய்யும்
என்பதாலே வைத்திருத்தல் குற்ற மென்றார் !
புற்றுநோயை உண்டாக்கும்1 போதை யேற்றிப்
புலனைந்தின் செயல்பாட்டை முடங்கச் செய்யும்
குற்றங்கள் பலவற்றைப் புரியச் செய்யும்
குட்காவென் றதனைவிற்கத் தடைவி தித்தார் !
முற்றாக ஒழிக்காமல் காவல் காரர்
முன்நின்றே உதவுகின்றார் என்ப தற்காய்க்
குற்றவாளி என்றுகடைக் கார ரோடு
கூண்டினிலே நிற்கவைத்துச் சிறைய டைத்தர் !
போதையினைத் தருமிந்தப் பொருளை யெல்லாம்
பொறுப்புடனே தடைசெய்த அரசாங் கந்தான்
போதைதரும் என்றறிந்தும் மதுக்க டையைப்
பொழுதெல்லாம் திறந்துளது தெருக்கள் தோறும் !
பாதைமாறி இளைஞர்தாம் பாழா தற்குப்
படுகுழியை வெட்டிட்ட அரசாங் கத்தின்
காதையார் திருகுவது எனநிற் காமல்
காவலராய் நாமெழுவோம் கைது செய்வோம் !
பாவலர் கருமலைத்தமிழாழன்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|