முத்தமிழை வீழ்த்தும் மும்மொழிக் கொள்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்
சிந்தனைக்குத் தாய்மொழிதாம்
ஏற்ற தென்று
சிந்தித்தே தமிழ்மொழிக்கு முதன்மை ஈய
இந்தியினை விரட்டுதற்குக் கல்வி தன்னில்
இருமொழியின் கொள்கையினைக் கொண்டு வந்தார் !
வந்தயிந்த கொள்கையினால் இந்தி ஓட
வகையாக அவ்விடத்தில் இங்கி லாந்தார்
முந்தியாண்ட அடிமையாலே ஆங்கி லத்தை
முதன்மைமொழி என்றேத்தி அமர வைத்தார் !
சந்ததியர் அம்மாவைப் பிணமாய்
யாக்கிச்
சவக்குழியை வெட்டிட்டார் தமிழன் னைக்கு
சிந்திக்கும் திறனுமின்றி அறிவு மின்றிச்
சிறந்ததமிழ்ப் பண்பாட்டைத் தொலைத்து விட்டார்
!
சொந்தமான உடையகற்றிக் கழுத்தி றுக்கும்
சொக்காய்க்குக் கயிறுகட்டி மாட்டிக் கொண்டார்
வந்திட்ட மழைதன்னைப் போபோ வென்றே
வளமான வாழ்க்கையினைத் துரத்தி விட்டார் !
ஒருமொழியாய்த் தமிழ்படித்த
நிலையை மாற்ற
ஓதுகின்றார் மும்மொழியைத் தில்லி யுள்ளோர்
இருமொழிகள் உள்ளபோதே தமிழில் கல்வி
இல்லையென்னும் நிலைமைதானே தமிழ கத்தில்
இருமொழிகள் மும்மொழியாய் ஆகி விட்டால்
இந்தியாவின் மொழியென்றே இந்தி ஓங்கும்
பெருமுலக மொழியென்றே ஆங்கி லந்தான்
பெயர்சொல்லும் ! தமிழ்மொழியோ முடங்கிப் போகும்
!
பாவலர் கருமலைத்தமிழாழன்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|