ஹைக்கூகள்

முனைவர் வே. புகழேந்தி. பெங்களூரு
 


சவப்பெட்டியின் மேல்
சிலுவையின் ஆயுளை
நிர்ணயிக்கிறான் தச்சன்.

சரியான கால்களில்
செருப்பு அணிந்து நடக்கிறான்
அறுந்து போகிறது பால்யம்.

வானிலை மையம்
மழையில்லா இடத்தை கோடிட்டு காட்டிடும்
நகர்த்திய பழுது மகிழுந்து

எச்சிலால் துடைக்கிறாள்
பாலுண்ட மழலை உதட்டுக்கறையை
வறட்சியில் மருத்துவ மனை.

ஒளியுடன் பயணிக்கிறது
பார்வையற்ற யாசகன் விட்டுச்சென்ற
தொடர்வண்டி கீதம்.

கண்டெடுக்கப் படுகிறது
இருளில் தொலைந்த
பட்டாம் பூச்சியின் வண்ணம்.

அடக்கி வாசிக்கப்படும்
அம்மாவின் தொடர் இருமல்
தேர்வுக் கட்டண இறுதி நாள்.

வரைந்த பச்சோந்தி
வண்ணம் பூசுகையில்
குழம்பும் ஓவியன்.

கடும் வறட்சி -
காலி குடத்துடன் வருகிறாள்.
குதூகலத்தில் கலாய் பூசுபவன்.

வயல் வரப்பில் நாரை
பறந்ததும் விழுந்து விடுகிறது
நிழல்.

மழையுடன் ஆலங்கட்டி
சேகரிக்கிறது சட்டைப்பையில்
சோளக்காட்டு பொம்மை.

கனி சுவைக்கும் அணில்
சப்புக்கொட்டை குறைத்துக் கொள்கிறது
கீழ்ச்செடியில் பட்டாம் பூச்சி.

பழுதடைந்த தொடர்வண்டி
ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது
பனை மரம்.

அடிக்கடி மறையும் ஆதவன்
நிழலை வீழ்த்துவதும் எடுத்தணைப்பதுமாய்
மா மரம்.

பறக்கையிலே உலர்ந்து விடுகிறது
நதியை தாண்டிய பறவையின்
நிழல்.

ஆற்றங்கரை -
நிதானமாய் மிதந்தோடுகிறது
கட்டெறும்புடன் உதிர்ந்த இலை

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்