எங்கே போனார்கள் ஆண்கள்
பாவலர் கருமலைத்தமிழாழன்
இலங்கையெனும் நாடதனில்
முல்லைத் தீவு
இதற்கடுத்த கிளிநொச்சி ஊரி லெல்லாம்
வலம்வந்து வலம்வந்து பார்த்த போது
வாவென்றே அழைப்பதற்கோர் ஆணு மில்லை
நலந்தன்னைக் கேட்பதற்கு முயன்ற போது
நடமாடும் ஒருசிறுவன் எதிரி லில்லை
புலர்காலை இரவுவரை நடந்து பார்த்தேன்
புலம்தன்னில் ஆண்வாடை வீச வில்லை !
எல்லோரும் பெண்கள்தாம்
! மிரட்சி யோடு
எனைக்கடந்து சென்றவர்கள் வந்தோர் தம்மில்
நல்லதொரு உடையணிந்தோர் யாரு மில்லை
நாற்பதிற்கும் மேலான வயதைக் கொண்டோர்
சொல்லிவைத்தாற் போல்தலையில் ஒருவர் கூட
சொருகிப்பூ வைத்ததினைப் பார்க்க வில்லை
பல்போன கிழவிகளும் விதவை கள்தாம்
பார்க்கின்ற வீடெல்லாம் நிறைந்தி ருந்தார் !
எங்கேதான் போனார்கள்
ஆண்க ளெல்லாம்
ஏறுபோன்ற காளையரைக் கணவன் மாரைத்
தாங்கிநின்ற சகோதரரைத் தந்தை யோடு
தவழ்ந்திட்ட ஆண்குழந்தை என்றெல் லோரை
ஓங்கியோங்கிச் சிங்களர்கள் அடித்த டித்தே
ஒருவரையும் விட்டிடாமல் கொன்ற தாலே
ஏங்குகின்ற பெண்களெல்லாம் ஆண்க ளின்றி
எப்பொழுது விடியுமெனக் காத்துள் ளார்கள் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|