இறந்தும் இறாவாக் காமராஜர்

புலவர் முருகேசு மயில்வாகனன்




காலங் கடந்தாலும் கண்ணியமாய் வாழ்ந்ததந்த
சீலஞ் சிறந்தநற் சீமானோ – பாலமவர்
சாலச் சிறந்தநற் சான்றோனாம் காமராஜர்
காலமெலாம் பேசுபொருள் காண்.

கற்காத காமராஜர் கல்விக்கண் காட்டினாரே
நற்கல்வி தந்தந்த நாயகனின் – பொற்காலம்
ஏழை எழியவர்க்கோர் நற்காலம் எல்லோர்க்கும்
தோழனாய்த் தொண்டுசெய் சீர்.

நாட்டின் விடுதலைக்காய் நானிலம் எங்குமே
வாட்டமின்றிச் சுற்றிவந்த மாமேதை – தேட்டந்தான்
ஏதுமின்றித் தேம்பி அழுதோரை ஏற்றிவைத்த
சாதுஅவர் சால்பால் சிறப்பு.

கொள்கைக்காய் வாழ்ந்தே கொடுமைகண் டஞ்சாத
வெள்ளையுள்ளங் கொண்டத தந்த வேந்தனவர் – கள்ளமிலா
மாணவர்கள் கண்கலங்கக் கண்டாலே கண்கலங்கும்
காணற் கரியநற் பண்பு.

ஆட்சித் தலைவனாய் ஆற்றுபணி ஆள்வோரின்
மாட்சிகண்ட மக்கள் மனங்கவர்ந்தார் – ஏடறிவு
அற்றாலும் ஏந்தலவர் ஐயமின்றிச் செய்பணிகள்
கற்றோரே மெச்சிநின்றார் காண்.

வாழவைத்தார் மக்களையே வாய்ப்பான வாழ்வுதந்தே
தாழ்வின் வறுமைமிஞ்சித் த த்தளித்த – ஏழ்மையினை
போக்குதற்காய் ஏற்றநற் காரியங்கள் ஏற்பாக
தேக்கமின்றிச் செய்தாரே தேர்ந்து.
 


 




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்