எழுக தமிழ்

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்
 

ஒற்றுமை இல்லா இனமென்று
      உலகம் கேலி பண்ணாது
ஒற்றுமை தன்னை வெளிக்காட்ட
     ஒன்று பட்டு அணிதிரள்வோம்!
இற்றை வரைக்கும் எமைஏய்த்தோர்
     இனியும் வேண்டா மெனக்கூறி
முற்றும் புதிய பாதையிலே
     முன்னே றிடுவோம் வாருங்கள்!!

எங்கும் கேட்கக் குரல்கொடுப்போம்!
     'எழுக தமிழென' முழங்கிடுவோம்!!
'பொங்கி எழுந்தார்' தமிழரெனப்
     பூவுல கிற்கு உணர்த்திடுவோம்!
'எங்கள் நிலமும் தமிழ்மொழியும்
     எமக்கே உரியது' எனக்கூறிச்
சங்க நாதம் செய்தார்கள்
     தமிழர் என்று காட்டிடுவோம்!!

கதிரைக் காக அடிபட்டோம்!
     கட்சி பெயரால் இழுபட்டோம்!!
முதியோர் இராச தந்திரத்தை
     முழுதாய் நம்பி ஏமாந்தோம்!
புதிய தலைமுறை இதைப்போக்கிப்
     போரில் லாது உலகேற்கும்
விதியைச் செய்து தமிழர்களின்
     விடுதலைக் காகப் போரிடுவோம்!

இனப்படு கொலையில் உலகத்தில்
     இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்கள்
மனமது மாறித் தமிழர்க்கு
     வழங்கிடு வார்கள் தீர்வென்று
கனவது காணச் சொல்பவரின்
     கதைகளைக் கேட்டது போதுமப்பா!
இனவிடு தலையை வேண்டும்நாம்
     இணைப்போம் கைகளை ஒன்றாக!




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்