அரிதினும் அரிதாம் அறிந்திடுக

கவிஞர் இனியன்,  கரூர்


தாமரை இலைமேல் நீர்த்துளியும்
தகதக என்றே ஒளிர்ந்திடுமே!
ஆமாம் அதுவும் இலைமேலே
ஆட்டம் போடும் சிலநொடியே!

சற்றே அவ்விலை அசைந்தாலும்
சட்டென அத்துளி விழுந்தொழியும்!
உற்று நோக்கின் உலகினிலே
உள்ளோர் வாழ்வும் அப்படித்தான்!

நறுமலர் குழந்தை பறவையொடு
நற்றவ முனிவர் கெட்டவர்கள்
உறுசின விலங்கு யாவரையும்
உளமார் அன்புடன் போற்றிடுக!

இமைக்கும் பொழுதில் இதயத்தின்
இயக்கம் நின்றிடும் இனியேனும்
அமைதி யாய்நீ வாழ்வதுடன்
அனைவரும் அப்படி வாழவிடு!

உலகில் உயிர்கள் வருந்தும்படி
உறுகண் எதுவும் செய்யற்க.
அலகில் மதிப்புடை இப்பிறவி
அரிதினும் அரிதாம் அறிந்திடுக!


(கண்ணில் பட்ட ஓர் ஆங்கிலக் கவிதையின் மொழியாக்கம்)

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்