நாடாளுமன்றத் தேர்தல் – 2019

புலவர் முருகேசு மயில்வாகனன்


தேர்தல் காலமிது தேர்ந்தறிந்த கட்சிகட்கே
ஆர்வமுடன் சென்றெவரும் ஆளும் வலிமைசேர்க்கக்
கூர்மையாய்ச் சிந்தித்தே கூரறிவைப் பாவித்தே
நேர்மையுள்ள வேட்பாளர்க்கு நிதானமாய் வாக்களிப்பீர்.

நாட்டினது முன்னேற்றம் நாடாள் தலைவரதே
வாட்டமின்றி அளிக்கின்ற வாக்குத் தானே!
கோட்பாடு கொள்கைகள் கொண்டநற் கட்சிகட்கு
வேட்பாக வாக்களித்தே வெற்றிவாகை சூடுடுவீர்.

நாடெங்கும் தேர்தல்கள் நன்முறையில் நடந்தாலும்
ஊடுருவும் வாக்குகளும் உண்மைக்குப் புறம்புதானே?
நாடென்றும் முன்னேற நற்றலைவர் வரவேண்டும்
வாட்டமின்றி மக்களுமே வாக்களிக்க வேண்டுமே.

நீதிக்காய்ப் போராடும் நேசமுடைக் கனடாவோ
சாதிமத பேதமற்ற சாதனை யாளரிவள்
மோதி மிதிக்காத மேதகு அன்னையின்
தேர்தல் களத்திலே தேசபக்தி காட்டிடுவோம்.

நாடிவந்த எங்களுக்கு நல்வழி காட்டியோரை
தேடியே வாக்களித்துத் தேர்தலில் வெல்லவைக்க
ஓடி ஒழிக்காது ஒருமித்து வாக்களித்தே
தேடிடுவோம் நல்லரசை தேர்தல் மூலமே

கொள்கைக்கு வாக்களித்தே கோடிட்டுக் காட்டிடுவோம்
தெள்ளத் தெளிந்தறிந்தே தேர்தல் களஞ்சென்றே
அள்ளிக் கொடுத்திடுவோம் ஆர்வமுடன் வாக்குகளை
உள்ளத் தெளிவுடனே ஊராளும் வல்லவர்க்கே.

தன்னார்வத் தொண்டர்கள் தாமாக முன்வந்தே
இன்னலுக் கஞ்சாதே இணைந்துகொண்ட கட்சிகட்காய்
உண்மைபேசி வாக்கினை உரிமையுடன் கேட்போர்க்கு
உண்மையுணர்ந்து நாமும் ஊக்கமுடன் வாக்களிப்போம்.

நாட்டினது காப்புக்காய் நாமளிக்கும் வாக்கிதுவே
ஈட்டுசக்தி இதுதானே இதையுணர்நத வாக்காளர்
வாட்டமின்றிச் சென்றங்கே வலிமையுள்ள வாக்கிதனைப்
போட்டிடுவீர் பெட்டியுள்ளே பொழுது போகுமுன்னே.

 


 




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்