கடந்து செல்லும் தீபாவளி (தன்முனைக் கவிதைகள்)

கவிமாமணி "இளவல்" ஹரிஹரன்
 

மத்தாப்பு வெளிச்சத்தில்
தெளிவாகத் தெரிகிறது
வெடிக்காத வெடிகள்
பொறுக்கும் சிறுவர்கள்.....

பட்டாசுத் துப்பாக்கிக்காக
முரண்டு பிடித்த
பிடிவாத ஞாபகங்கள்
நிழலாடுகின்றன நினைவில்.

நட்சத்திர வெளிச்சம்
வேடிக்கை காட்டும்
கம்பி மத்தாப்புகள்
சுடாமலிருந்ததில்லை கைகளை

ஏகமாய்த் தின்ற
இனிப்புத் தின்பண்டங்கள்
ஏப்பமாய் வெளிப்பட
மேயும் ஏக்கப் பார்வைகள்

மேலே போ மேலே போவெனத்
தூவாணம் விட்டவன்
தங்கிவிட்டான் வாழ்வில்
கீழாக வந்து

பளபளவெனும் பட்டாடை
உடுத்திக்கொண்டவன் மீது
ஓயாமல் மேய்கின்றன
பொறாமைப் பார்வைகள்

ஊரடங்கிய பின்
ஊருக்கே தெரிய
ஒத்தையாக வெடிக்கிறான்
பத்தாயிரம் சரவெடி

ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்க்கிறான்
அடுத்தவன் பட்டாசுகளை
காசைக் கரியாக்காதவன்

வெடிச் சத்தம்
எப்போதும் எதிரொலிக்கும்
பட்டாசு ஆலை விபத்தில்
எரிந்து மரித்தோர் அலறல்

காலியான
சட்டைப் பைகளைத்
தந்தையர்க்கு அன்பளித்து
கடந்து செல்லும் தீபாவளி

 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்