தைத்திருநாள்!      

கவிஞர் மாவிலி மைந்தன் சி.சண்முகராஜா, கனடா


செந்தமிழர் வாழ்நிலத்துச் செம்மாந்த பண்பாடாய்

முந்தை மரபுவழி வந்ததுவே தைத்திருநாள்!

இந்தத் தலைமுறைக்கும் இன்னும் பலமுறைக்கும்

சொந்தமென வந்தபெருஞ் சொத்தேயெம் தைத்திருநாள்! 

சாதிமதம் பேசுகின்ற சாத்திரத்தைச் சாகடித்து

நீதிவழி நம்மினத்தை நிற்கவைத்த மெய்த்திருநாள்!

ஏர்போற்றிக் கார்போற்றி எம்மினத்து வேர்போற்றிப்

பார்போற்றிப் பால்பொங்கும் பைந்தமிழர் தைத்திருநாள்!

மஞ்சள் இலைகட்டி மங்கலமாய் வாழ்த்தொலித்து

இஞ்சி இலைதொடுத்து இன்பநிலை ஊற்றெடுக்கக்

கன்னல் கரும்பேபோல் காதல் மனைசெழிக்கப்

பொங்கலோ பொங்கலெனப் பொங்கும் தமிழ்த்திருநாள்!

ஏறு தழுவுதலை எம்நாட்டார் நுண்கலையை

வீர விளையாட்டை மீட்டுவரும் பொற்திருநாள்!

மன்னுலகைக் காக்க மழையாகிக் காற்றாகி

மின்னும் ஒளியாகி மிளிரும் கதிரோனைத்

தைபிறக்க எங்கும் தமிழாலே வாழ்த்தொலித்துக்

கையெடுத்துப் போற்றக் களிப்பேற்றும் நற்திருநாள்!

பொங்கலோ பொங்கலெனப் போற்றுவோம் இந்நாளில்

பொங்குக இன்பம் பொலிந்தெங்கும் மங்கலம்

தங்குக ஞாலம் தழைத்து!



 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்