புலம்பெயர் நாட்டினிலே பொங்கற் சுவை

புலவர் முருகேசு மயில்வாகனன்

 

 

பொங்கி மகிழ்ந்தோம் பொன்கொழிக்கும் ஈழத்தில்

செங்கோலின் சீர்கேட்டால் செந்தமிழாள் பங்கமுற

உள்ளக் குமுறலால் ஊனமுற்ற வாலிபர்கள்

மெள்ள எழுந்தார் எதிர்.

 

போர்ச்சூழல் காரணமாய்ப் போக்கிடம் தேடியே

சீர்கெட்ட நாடிருந்தே தேர்ந்தெடுத்த பார்சென்றே

வாழ்விடத்தைத் தேடியே வாழ்கின்றார் மக்களின்று

தாழ்விலா வாழ்வவர்க்குத் தான்.

 

இன்முகம் காட்டியே இன்புடன் ஏற்றெம்மை

உன்னத வாழ்வளித்த உத்தமியாள் அனபுசால்

அன்னை கனடாவின் ஆதரவால் இன்றுநாம்

இன்னலின்றி வாழ்கின்றோம் ஈங்கு.

 

தாய்நாட்டுப் பொங்கல் தனித்துவம் கொண்டதுவே

ஐயமின்றி என்சிந்தை அங்குசெல்ல தொய்வுகொள்

என்னுடலோ செய்வதறி யாதேங்கும் காட்சியிங்கு

இன்னல்தான் எஞ்சும் எதிர்.

 

பனிபடர்ந்த பூமியிது பார்வைக் கழகு

இனிப்பான பொங்கலில்லை ஏற்ற தனித்துவம்

ஏதுமில்லை முற்றமோ வெண்பூச்சு என்செய்ய

பாதுகாப்பு இங்குண்டு பார்.

 

மின்னடுப்புப் பொங்கல் மிகையாக ஏதுமில்லை

அன்பைப் பொழியும் அனைவரும் பன்னோக்காய்

அங்கிங்கு சென்றதனால் அன்பு மனையாள்

தங்கியே பொங்குகிறாள் தான்.

 

சுவைக்குமா இப்பொங்கல் சூழாத சுற்றம்

தவறான காலநிலை தப்பிவரும் ஆதவன்

ஏதுமற்ற நேரத்தில் ஏற்றுத்தான் பொங்குகிறோம்

தீதேது மில்லைத்தான் தேர்.

 

வீட்டின் நடுவினிலே வித்தகஞ்சேர் கோலமிட்டே

கூட்டுப் பொறுப்புடனே கூடியொன்றாய் வேட்புடனே

மின்னடுப்பு வைத்தே மிகநெருப் பின்றியே

உன்னதமாய்ப் பொங்கிமகிழ் வோம்.

 

புலம்பெயர் நாட்டின் புதுச்சுவைப் பொங்கல்

கலகலப்பாய்க் கொண்டாடும் காலம் சிலரின்

பெருமுயற்சிப் பேறு மரபுசால் திங்கள்

பெருவிருந் தெங்கள் பெருமை.

 

ஓய்வான நாளொன்றில் ஒன்றுகூடி நம்கலையை

தேய்வின்றித் தேர்ந்த கலைஞர்கள் காய்வின்றி

மக்கள்முன் தம்திறனைக் காட்டி மனநிறைவைப்

பக்குவமாய்ப் பெற்றிடுவர் பார்.

 

                   


 




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்