நல்லரசு

கவிஞர் இனியன்,  கரூர்





உலகின் அச்சாய் விளங்குகிற
       உழவன் சிந்தும் வேர்வைகளே
நலந்தரு நெல்மணி நற்கரும்பு
       நற்கனி என்றே உருவாகும்!
உழவன் கணக்குப் பார்த்தாலே
       உழக்குக் கூட மிஞ்சாதாம்!
முழந்துணி சோறும் இல்லாமல்
       முடங்கிப் போவான் சிலநாளில்!
உழைப்பால் விளைந்த பொருளுக்கு
       உயர்ந்த விலைகள் கிடைத்தாலே
உழவர் திருநாள் உழவனுக்கு
       உவகை நல்கிடும் நாளாகும்!
இடையில் தரகர் இல்லாமல்
      இனிதே பொருளை விற்பதற்குத்
தடைகள் இல்லாத் தனித்திட்டம்
       தந்திடும் அரசே நல்லரசாம்!



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்