குறுங்கவிதைகள்

முனைவர் வே. புகழேந்தி. பெங்களூரு



மொழி பெயர்க்கப்படுகின்றன
முதலிரவு அறைகளில்
ஏதேன் தோட்டத்து
நிர்வாண உரையாடல்கள்.


நாட்காட்டியின் தாள்களை
புரட்டுகிறாள் முதிர் கன்னி
புறமுதுகிட்டு ஓடுகின்றன
முகூர்த்த நாட்கள்.


ஏகாங்கியாய் நிற்கிறேன்
ஏரிக்கரையில்
ஏக்கத்துடன் வீசிடும் காற்றே
என்னவளைப் பிரிந்த எந்தன்
ஏகாந்தத்தின் ஏக சாட்சி.


மஞ்சத்தில் உதிர்ந்துலர்ந்த மலர்கள்
மணமில்லை என்ற போதும்
மனம் தளராமல் காக்கிறேன்
மனமில்லை மனைவியுடன் எரித்திட.


நள்ளிரவில் வீசிடும் தென்றல்
நடுநிசி நாய்க் குரைப்பு
அயர்ந்துறங்கும் ஆயிரமாயிரம்
அளப்பறியா அபிலாசைகள்.


 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்