உயிராயுதமா...?

அருள்மணி சபா.அருள்சுப்பிரமணியம்




உயிரா யுதம்போல் மாறியின்று - இந்த
உலகை கலக்கும் கொரொனாவே!
புதிதாய் வந்தாய் உலகினைநீ – ஒரு
போர்க்கா லம்போல் மாற்றிவிட்டாய்!!

இயற்கைச் சமநிலை பேணுதற்கு – அந்த
இயற்கைத் தாயுனை ஏவினளா?
செயற்கைக் கருவிகள் கண்டுலகைத் – தினம்
சீரழிப் பவர்கள் படைத்தனரா?

உலக ஒழுங்கை மாற்றியதேன்? – எம்மை
உயிர்ப்பலி எடுத்து மகிழுவதேன்?
நிலவிற் காலைப் பதித்தஎமை - இன்று
நிம்மதி குலைத்தேன் அலைக்கின்றாய்?

வீரியம் பேசிய அரசுகளை - இன்று
வீழ்த்தி அடக்கிட வந்தாயா?
சேரியும் மாடமும் பாராது – சென்று
சீரழிப் பதுஏன் சொல்வாயா?

'போரை நடத்தி வென்றிடுவோம் - இந்தப்
பூமியை அடக்கி ஆண்டிடுவோம்
யாரையும் பணிய வைத்திடுவோம்' - என்ற
நாவினை அடக்கிய கொரொனாவே!

பொருளா தாரம் தனைச்சிதைத்தாய்! - எங்கள்
பொழுது போக்குகள் தமைக்குலைத்தாய்!!
உருத்தெரி யாத நுண்ணுயிர்நீ - இந்த
உலகை எப்படிக் கலக்கிவிட்டாய்...?

ஆளிடம் தரமெதும் பார்க்காமல் - இந்த
அவனியை உலுப்பும் கொரொனாவே!
வாழிடம் பூமியில் தரமாட்டான் - உன்னை
மாய்த்தே வெல்வான் மனிதன்பார்!!

அலட்சியம் செய்பவர் வாழ்க்கையிலே – என்றும்
அவதிப் படுவர் என்பதைநீ
பலம்பெறு மனிதரும் உணரவைத்து - நல்ல
படிப்பினை தந்தாய் மறப்போமா?





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்