தேடுவது  சரிதானா

பாவலர்  கருமலைத்தமிழாழன் 


கண்களைக்   கட்டிக்   கொண்டு
        
கதிரினைத்   தேடு   கின்றோம்
விண்ணினை   இருளச்   செய்து

        
விளக்கினைத்   தேடு   கின்றோம் ! 

கதவினை   மூடிக்   கொண்டு
        
காற்றினைத்   தேடு   கின்றோம்
மதங்களுள்   புதைத்து   விட்டு

        
மனிதனைத்   தேடு   கின்றோம் !
 

மரங்களை   வெட்டி   விட்டு
        
மழையினைத்   தேடு   கின்றோம்
கரங்களைப்   பிணைத்துக்  கொண்டு

        
கனவினைத்   தேடு  கின்றோம் !
 

களங்களைக்   கொடுத்து   விட்டுக்
        
காட்சியைத்   தேடு  கின்றோம்
வளங்களைச்  சுருட்ட  விட்டு

        
வாழ்க்கையைத்   தேடு   கின்றோம் !
 

சேற்றினில்   காலை   நுழைத்துச்
        
செருப்பினைத்   தேடு   கின்றோம்
ஆற்றினில்   மணலை   யள்ளி

        
அலைகளைத்   தேடு   கின்றோம் !
                      

நிலங்களைத்   தொலைத்து   விட்டு
        
நெல்லினைத்   தேடு   கின்றோம்
மலத்தினைப்   பூசிக்   கொண்டு

        
மணத்தினைத்   தேடு   கின்றோம் !
 

முகத்தினை   மறைத்துக்   கொண்டு
        
முறுவலைத்   தேடு   கின்றோம்
அகத்தினை   அடைத்துக்   கொண்டு

        
அன்பினைத்   தேடு   கின்றோம் !
 

செயற்கையை   அவிழ்த்து   விட்டு
        
செம்மையைத்   தேடு   கின்றோம்
இயற்கையை   அழித்து   விட்டு

        
இறையினைத்   தேடு   கின்றோம் !

 





 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்