காற்றலைகளில் கவிஞர்.கு.மா.பா.!

கவிஞர் கு.மா.பா.திருநாவுக்கரசு




(கவிஞர். கு.மா.பா. நூற்றாண்டு நிறைவு (13.5.2020) சிறப்புக் கவிதை)


தென்றலிலே தவழ்ந்துவரும் சினிமாப் பாட்டு!
         செவியமுத விருந்தாகும் இசையின் ஊற்று!
ஒன்றிடுவார் நேயரெல்லாம் தாளம் போட்டு!
         உள்ளங்கள் லயித்துவிழும் சொற்கள் கேட்டு!
அன்றொலித்த பழம்பாடல் காட்சியோடு,
        அவர்சின்ன விழித்திரையில் படத்தைப் பார்த்து,
இன்குரலின் ஈர்ப்பினிலே வசியப் பட்டு,
        எண்ணற்றோர் விரும்புவதே இசையின் மெட்டு!

சாமான்ய விவசாயி மாரி முத்து,
        தனயனிவர் சிறுவயதில் எழுதக் கற்று,
தாமாக தமிழ்ப்பற்றை வளர்த்துக கொண்டு,
      தாய் கோவிந்தம்மாளின் ஒற்றை மைந்தன்,
கு.மா.பா. பத்திரிகை ஆசான் ஆகி,
        கொள்கைவழி தன்மான உணர்வும் பெற்று,
தாம்வாழ்ந்த காலத்தில் எல்லை மீட்பில்,
        தமிழ்மண்ணின் உரிமைக்கே சிறை புகுந்தார்!

அண்ணாவின் 'ஓர் இரவு' படத்திற்காக
       ஆரம்பப் பாட்டெழுதி அடியை ஊன்றி,
இன்னிசைக்கு ஏற்ற பல பாடல் தந்து,
       இன்றளவும் நேயர்களின் நெஞ்சம் போற்றும்,
பண்ணிசையின் பாவலராம் கு.மா.பா. வின்,
        பாட்டுக்கள் காலத்தை வென்று நிற்கும்!
மண்ணுலகில் காற்றுலவும் காலம் எல்லாம்,
        மனம்விரும்பும் இவர்வரிகள் எதிரொலிக்கும்!


சட்டமன்ற மேலவையில், தமிழகத்தில்,
        தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றில்,
பட்டறிவால் பொறுப்புகளில் பணி புரிந்தார்!
        பாராட்டுக் குரிய கவிக் குயிலாய் ஒலித்தார்!
கட்டைவிரல், சுட்டுவிரல், விரலாம் ஆறை,
        கைப்பிடிக்க கவிதை பல எழுதி வைத்தார்!
வட்டமிடும் நிலவொளியே வளரும், தேயும்!
        'மாசில்லா ஒலி நிலவோ' கானம் பாடும்!

'ஆடாத மனம்கூட ஆடும்' வண்ணம்,
        அடிகொடுத்த 'யாரடி நீ மோகினி?' ஆட்டம்!
நாடாண்ட 'கட்டபொம்மன்' படப் பாடல்கள்,
        நற்கவிஞன் 'காளிதாஸ்' கதை வசனங்கள்,
ஏடாண்ட எழுத்தாளன் இயற்றித் தந்த
        இன்'அமுதைப் பொழிகின்ற நிலவுப்' பாட்டு!
பாடாதார் எவரோ? 'சிங்கார வேலன்'
        பாட்டுக்கு உருகாத மனம்தான் உண்டோ?

காற்றினலை எந்நாளும் கவியின் மாண்பை
        கானத்தின் வரிகளிலே ஒலித்திருக்கும்!
கூற்றுவனால் மாகவிஞன் உயிர்ப் பிரிந்தும்,
        கு.மா.பா. எழுதியவை நிலைத்திருக்கும்!
ஆற்றலுள்ள இவர்புகழோ அழியாதென்றும்,
        அதைரசிக்கும் மனங்களிலே உயிர்த்திருக்கும்!
நூற்றாண்டை நிறைவுசெய்யும் கவியின் எண்ணம்,
        நோக்கங்கள் தமிழுணர்வை விதைத்திருக்கும்!


'கலைமாமணி' கவிஞர். கு.மா.பா. புகழ் வாழ்க!







உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்