புதுவழி காண்போம் வாருங்கள்!!
அருள்மணி
சபா.அருள்சுப்பிரமணியம்
பதினோ
ராண்டுகள் ஆகியும்நாம்
பார்க்கும் பார்வை மாறவில்லை
கதியென நம்பி எத்தர்களின்
கைப்பா வைகளாய் மாறிவிட்டோம்!
சதிவலை பின்னும் கூட்டத்தின்
சாகச மொழியில் வீழ்ந்தின்று
பதிதாய்ப் பாதை வகுப்பதற்கும்
புரியா தவராய் தவிக்கின்றோம்;!!
துள்ளிக் குதித்த கயவர்களும்
துணையாய் நின்ற துரோகிகளும்
உள்ளம் நொறுங்கிப் போய்;தமிழர்
உணர்வு மழுங்கிப் போவதற்கு
முள்ளி வாய்க்கால் அவலங்கள்
முடிவாய் அமையும் எனநினைத்தார்
கிள்ளுக் கீரை இல்லையென்று
கிளர்ந்து எழுந்து நிறுவிடுவோம்!
கண்ணீர் விட்டுக் கதறுவதாற்
காரிய மொன்றும் நடக்காது
எண்ணம் தன்னில் இனவுணர்வை
ஏற்றிச் சுதந்திர வேட்கையுடன்
உண்மை யாக உழைப்பதுதான்
உரிமைக் கான வழியென்று
கண்ணிய மாக நம்பிடுவோம்!
கயமை ஒழித்து ஒன்றிணைவோம்!!
வாயாற் பந்தல் போட்டோம்நாம்
வாங்கிய நன்மை ஏதுமில்லை....
நாயாய்க் கருதி எம்மினத்தை
நசுக்க நினைக்கும் கொடியவரை
தீயாய் மாறிப் பொசுக்குதற்குச்
சேர்ந்து ஒன்றாய்ப் பணிபுரிவோம்!
ஓயா துழைக்கும் உரத்தோடு
ஒற்றுமை யாகக் கைசேர்ப்போம்!!
தனித்தனி மரமாய் நாம்நின்று
சாதித்த தென்ன சிந்திப்போம்!
பனிப்போர் தன்னை நிறுத்திடுவோம்!
பகையது வெல்லத் துணிந்திடுவோம்!!
இனிப்பாய்ப் பேசி எமைஏய்க்கும்
எங்கள் தலைமைகள் நீங்கட்டும்!
இனியொரு புதிய தலைமுறையை
இணைந்து நாங்கள் ஆக்கிடுவோம்!
மாண்டவர் தன்னை நாம்நினைத்து
மதிப்புச் செய்ய உளம்கொண்டால்
நீண்ட நாளாய் அன்னவர்கள்
நினைத்த கனவை நனவாக்க
வேண்டிய கருமம் ஆற்றிடுவோம்!
விவேகத் தோடு கைகோர்த்துப்
பூண்ட குறிக்கோள் மாறாது
புதுவழி காண்போம் வாருங்கள்!!