உடைந்த கடவுள்
வித்யாசாகர்
1
தங்கத்தில் தொங்கட்டான்
வைரத்தில் மூக்குத்தி
பத்து சவரத்தில் தாலி சரடு
வெள்ளியில் சொம்பும் குத்துவிளக்கும்
பித்தளையில் அண்டாவும் வாலியும்
போதா குறைக்கு -
மாப்பிள்ளைக்கு வண்டியும்
ஒரு லட்சம் ரொக்கமும் கொடுத்து
திருமணம் செய்து வைத்த அப்பாவின்
வட்டிப் பணத்தை -
கணவனுக்கு சொல்லாமல் அழும் கண்ணீரால்
கட்டிட முடிவதில்லை தான்; என்னால்!!
--------------
2
மூச்சுப் பிடித்து
கேட்டு வாங்கிய வரதச்சனை
பொருட்கள்
வெறுமனே பரணையில்
தூசியுற்றுக் கிடந்தது;
அண்ணாவின்
கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை
அந்த தூசிகளுக்கும்
வரதட்சணை கேட்பவர்களுக்கும்
தெரிந்தாவிடும்?!!
---------
3
குழந்தையோடு
தாய்வீடு சென்றிருந்தேன்
ஒரு நாள் மட்டும் குழந்தையை
விட்டுவிட்டு போடி என்றாள் அம்மா
ஐயோ ஒருநாளா
குழந்தையை விட்டுட்டு
ஒருநொடி கூட
இருக்க முடியாது; உயிரே போய்விடும்
என்றார் அவர்.
அம்மா நமுட்டாக சிரித்தாள்,
காலத்தின் நீதியும்
அம்மாவின் சிரிப்பும்
எனக்குப் புரிந்தது;
அவருக்கு புரியவில்லை!!
-------------
4
ஒரு ஜாமின்ரி பாக்சும்
பத்து நோட்டும்
ஆறு புத்தகமும்
ஒரு அரிச்சுவடியும்
வாய்ப்பாடும் வாங்கித் தந்தார்
என் அப்பா.
நான் படித்து
பட்டதாரியாகி
ஒரு அரசு வேலையில் கூட
சேர்ந்துவிட்டேன்;
என் பிள்ளைக்கு
கணினியும்
போக்குவரத்து கட்டணமும்
மாதமொருமுறை ரொக்க பணமும்
போகவர செலவுக்கும்
புதிது புதியதாய் ஆடைகளும்
வயதுக்கு காதலும் கொடுத்து
படிக்க வைக்கையில் -
அவன் படிப்பு
என் வருமானத்தை பார்த்து
சிரிக்கத்தான் செய்கிறது;
அவன் படித்து முடிக்கும் வரை
எங்கு என் வேலை இருக்குமோ? பறிபோகுமோ?
என்ற என் கவலை வேறு,
காசுகொடுத்து வர
சேர் ஆட்டோ கூட சுமையாக தெரிய
நடந்தே தேய்ந்த என் கால்களின்
வலி என் மனைவிக்கு கூடத் தெரியாது,
அலுவலில் சட்டை பிடிக்காமல்
சண்டையிடும்
அதிகாரிகளின் பயம்
வீட்டின் நான்கு சுவர்களாகவே
எனை சுற்றி நின்றும்
சிரிப்பது போல காட்டிக் கொள்வது
ஒரு கனமான வேதனை தான்,
இரவு கூட எத்தனை
நரகத் தனமானது,
நாளை
என்ன எல்லாம் காத்திருக்குமோ
எப்பொழுது உறக்கம் வருமோ
கடனெல்லாம் அடைத்துவிடுவேனா
எல்லாம் கரைசேருமா... என நிறைய பாரம் - உள்ளே
யாருக்குமே தெரியாமல்
இருக்கத் தான் செய்கிறது,
முன்பெல்லாம்
வயதில் பெரியவர்கள் இறந்தால்
இதயம் வேகவே இல்லை 'என்னெல்லாம்
வைத்திருந்தாரோ' என்பார்கள்;
என்னவெல்லாம் வைத்திருந்திருப்பார் அவர்?
எனக்குப் புரிந்தது - அவரின் வேகாத மனதின்
பாரம்;
அதெல்லாம் மறந்து
ஏதோ ஒரு நம்பிக்கை என் பிள்ளைக்காகவும்
மிச்சமிருக்கத் தான் செய்தது;
அவன் அதைபற்றியெல்லாம்
கவலைப் பட்டிருக்கவேயில்லை,
காதலியை பார்க்க காத்திருக்கும்
காத்திருப்பை மட்டும்
எனக்கு தெரியாமல் நாட்குறிப்பில்
எழுதிக் கொண்டிருந்தான்;
தூர நிற்கும் நான்
அவன் கண்ணிற்கு கூட
தெரியவேயில்லை!!!
vidhyasagar1976@gmail.com
|