அறம்
பாவலர்
கருமலைத்தமிழாழன்
புறம்பேசி ஆங்கிலந்தான்
உயர்வாம் என்று
புகழ்ந்துரைக்கும் தமிழர்காள் சற்றே யிந்த
அறமென்னும் பொருள்பொதிந்த
சொல்லைப் போன்ற
அரும்சொல்தாம் அம்மொழியுள் உண்டோ சொல்வீர் !
அறம்என்னும் சொல்நமக்குப்
பொய்கூ றாமை
அடுத்தவீட்டை நோக்காமை சினம்கொள் ளாமை
பிறர்பொருளை நினையாமை
புறம்கூ றாமை
பிழைசுட்டல் எனவுணர்த்தும் சுரபி யாகும் !
அடுததவரின் உயர்வுக்குப்
பொறாமை கொள்ளல்
அடக்காமல் ஆசைகளை வளர்த்துக் கொள்ளல்
கடுஞ்சொற்கள் பேசிசினம்
பிறர்மேல் கொள்ளல்
களங்கத்தைத் தருமன்றிச் செம்மை தாரா
அடுக்கடுக்காய்த்
தவறுகளைச் செய்யத் தூண்டும்
அழுக்குகளை மனம்நீக்கல் அறமாம் என்றே
எடுத்துரைக்கும்
வள்ளுவனார் குறளை ஏற்றால்
எல்லோரும் அன்பாலே இணைந்து வாழ்வோம் !
பக்கத்து வீட்டாரின்
பசியைப் போக்கிப்
பகுத்துண்ணல் கொடுக்காமல் பதுக்கு வோரைத்
தக்கபடி தண்டித்தல் ஆட்சி
யாளர்
தவறுகளைத் துணிவுடனே எடுத்து ரைத்தல்
சொக்கப்பொன் பணத்தாள்கள்
கொடுத்த போதும்
சொக்கிடாமல் நேர்வழியில் செயல்க ளாற்றல்
சிக்கல்கள் நெருக்கடிகள்
கொடுத்த போதும்
சிந்தைவழி நடத்தலெல்லாம் அறத்தின் பாலாம் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|